இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டும் – வெளிநாட்டுத்தூதரகங்களிடம் சிவில் சமூகக்கூட்டிணைவு வலியறுத்தல்

இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்குவதற்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்கும் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் சர்வதேச நாடுகள் தலையீடு செய்யவேண்டுமமென வலியுறுத்தி சிவில் சமூகக்கூட்டிணைவினால் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத்தூதரகங்களிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் குரல்கொடுக்கவேண்டுமென வலியுறுத்தி  100 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சட்டம் மற்றும் சமூக நிதியம், தேசிய புத்திஜீவிகள் அமைப்பு, காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், இளம் ஊடகவியலாளர் அமைப்பு உள்ளிட்ட 35 சிவில் சமூக அமைப்புக்களும் கூட்டாக இணைந்து தயாரித்துள்ள மகஜர் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள சுவிஸ்லாந்து தூதரகம், அவுஸ்திரேலியா தூதரகம், பிரிட்டன் தூதரகம், சீனத்தூதகரம், ரஷ்யத்தூதரகம், நெதர்லாந்து தூதரகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

மேற்குறிப்பிட்டவாறு சிவில் சமூகக்கூட்டிணைவால் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத்தூதரகங்களிடம் கையளிக்கப்பட்ட மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடியானது நாடளாவிய ரீதியில் பாரிய பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

அதன்விளைவாக உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடி, மக்களின் அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பூர்த்திசெய்வதில் கடும் சவால்களைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள்மீது அடக்கமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது.

அரசாங்கம் தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து ‘ஒடுக்குமுறை’ சட்டங்களையும் ஜனநாயகத்துக்கும் அமைதிப்போராட்டங்களுக்கும் எதிராகப் பயன்படுத்திவருகின்றது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து தற்போதுவரை சுமார் 3000 க்கும் மேற்பட்ட இளம் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் மாணவத்தலைவர்கள் (போராட்டங்களில் ஈடுபடுவோர்) கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி இப்போது அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான தொழிற்சங்கங்களின் உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும், அவற்றின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் மிகமோசமான கருத்துக்களை வெளியிடுவதன் ஊடாகத் தற்போதைய நெருக்கடிக்குத் தொழிற்சங்கங்களே காரணம் என்று பழிசுமத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அதேபோன்று ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் நடாத்தப்படவேண்டியிருந்த நிலையில், அதனை நிறுத்துவதற்கும் அரசாங்கம் முற்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதன் ஊடாக மாத்திரமே பொருளாதார மீட்சியை அடைந்துகொள்ளமுடியும் என்று நாம் நம்புகின்றோம்.

அதேவேளை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிடாதிருக்குமாறும், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் தேர்தல்களை நடாத்துமாறும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் நீதித்துறையின் சுயாதீனத்துவத்தில் தலையிடுவதை நிறுத்துமாறும், மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை உறுதிசெய்யுமாறும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் போன்ற மிகமோசமான சட்டங்களைத் தயாரிப்பதை நிறுத்துமாறும், தொழிற்சங்கங்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துங்கள்.

அத்தோடு கண்ணீர்ப்புகை மற்றும் ஆபத்து விளைவிக்கக்கூடிய இரசாயனப்பொருட்களை இலங்கை அரசாங்கத்துக்கு விநியோகிப்பதைத் தவிர்ப்பதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு நிதியுதவிகளை வழங்க முன்னர் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மதிப்பீடொன்றை மேற்கொள்ளுமாறு உங்களிடம் கோருகின்றோம் என்று அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.