நவுருத்தீவில் அகதிகளை சிறைவைப்பதற்கான தடுப்பு முகாம்: மீண்டும் அங்கீகரித்த அவுஸ்திரேலிய அரசு 

நவுருத்தீவில் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த குடிவரவுத் தடுப்பு முகாம் செயல்படுவதற்கு மீண்டும் அங்கீகாரத்தை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் வழங்கியிருக்கிறது.  

தேசிய பாதுகாப்பை தொழிற்கட்சி தவறாக கையாள்வதாக கூறிய முன்பு ஆட்சியிலிருந்த தாராளவாத தேசிய கூட்டணியும் நவுருத்தீவில் முகாம் செயல்படுவதற்கான ஆதரவை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வழங்கியுள்ளது. அதே சமயம், இது முற்றிலும் மடத்தனமான செயல் என அவுஸ்திரேலிய சுதந்திர மேலவை உறுப்பினரான டேவிட் போகாக் விமர்சித்திருக்கிறார்.

தீவு நாடான நவுருவில் அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம் செயல்படுவதற்கான சட்டரீதியான ஏற்பாடு, கடந்த அக்டோபர் 1, 2022 ல் காலாவதியாகிய சூழலில் இந்த அங்கீகாரம் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

எல்லைகளை பாதுகாப்பதில் வலிமையாகவும்  மனிதாபிமானத்தை பேணுவதில் பலவீனமின்றி இருப்பதை உறுதிச்செய்ய இந்த அங்கீகாரம் தேவையாக உள்ளதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம் அவுஸ்திரேலியாவின் பசுமைக்கட்சி உறுப்பினர்களும் சுதந்திர பாராளுமன்ற உறுப்பினர்களும் அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியுள்ளனர்.

“ஒரு சிறு அளவிலான மக்களை சிறைவைக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து மூன்றாண்டுகளுக்கு 420 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர்கள் செலவு செய்வது அர்த்தமற்றதாக உள்ளது,” எனக் கூறியிருக்கிறார் அவுஸ்திரேலிய சுதந்திர மேலவை உறுப்பினரான டேவிட் போகாக்.