மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் பாராளுமன்ற உறுப்பினர்கள்: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 3-ம் திகதி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து; திமுகவின் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை “முதலமைச்சர் பொது நிவாரண நிதி”க்கு வழங்கிடுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலைரயில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ரூ.13.15 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சி சார்பில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




