கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை  ஆகாது-இந்திய நீதிமன்றம்

“கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது” இந்திய நீதிமன்றம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஈழதமிழரான சந்திரகுமார் என்பவர் தமிழகத்தில் உள்ள பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ளார். இவர் சில கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-திகதி முதல் 24ம் திகதி வரை உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கை பூந்தமல்லி காவல்துறையினர் பதிவு செய்தனர். இந்த வழக்கை புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகையையும் காவல்துறையினர்   தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இரத்து செய்ய கோரி சந்திரகுமார்,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில்,”கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி ஆகாது. இந்திய தண்டனை சட்டம் 309-ன் கீழ் (தற்கொலை முயற்சி) மனுதாரர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றத்துக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை தான்.

எனவே, இந்த குற்றப்பத்திரிகையை ஓர் ஆண்டுக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பூந்தமல்லி நீதிமன்றம், 3 ஆண்டுகளுக்கு பின்னர், எந்த ஒரு காரணமும் கூறாமல், குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால், எந்த பயனும் இல்லை. வழக்கை இரத்து செய்யப்படுகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.