இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டி – கைமாறியது மியான்மார் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கடந்த வாரம் மீண்டும் நான்காவது தடவை இராணுவ ஆட்சியினுள் சென்றுள்ளது மியான்மார். முன்னர் மூன்று தடவைகள் அங்கு கொண்டுவரப்பட்ட இராணுவ ஆட்சி என்பது 51 ஆண்டுகள் நீடித்திருந்தது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியை சேர்ந்த ஆங் சாங் சூகி மற்றும் அரச தலைவர் யூ வின் மியின்ற் ஆகியோர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறைப்பிடித்த இராணுவம், கடந்த முதலாம் நாள் அன்று அதிகாரத்தை கைப்பற்றியிருந்தது.

மியான்மாரில் இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், மியான்மாரின் சுதந்திரத்திற்காக போராடிய, தற்போது தடுப்புக்காவலில் உள்ள சூகியின் தந்தையான ஜெனரல் ஆங் சங் மியான்மாரின் இராணுவத்தை யப்பானின் துணையுடன் 1940 களின் ஆரம்பத்தில் பலம் பொருந்திய அமைப்பாக கட்டியமைத்திருந்தார்.

எனினும் அவர் 1947 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவரினால் உருவாக்கப்பட்ட இராணுவம் பொதுமக்களின் ஆதரவுடன் மிகப்பலம் பொருந்தியதாக வளர்ந்திருந்தது. அதனை அரசியல் கட்டுப்படுத்தவில்லை, இராணுவ ஆக்கிரமிப்புடன் தான் 1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பர்மா (அன்று பர்மா என்றே அழைக்கப்பட்டது) மலர்ந்திருந்தது.

பௌத்த சங்கங்களுக்கு நன்கொடைகளை வழங்குதல், அதற்கான மட ஆலயங்களை அமைத்தல் போன்ற விடயங்கள் மூலம் இராணுவம் எப்போதும் தனக்கான ஆதரவுகளை அதிகரித்தே வந்துள்ளது.

அதேசமயம், சீனாவிற்கான இந்து சமுத்திரத்தின் நுழைவுப் பதையாக மியான்மாரே விளங்கியதால் மியான்மாரின் நகர்வுகளில் சீனாவின் பங்கு மிக அதிகமாகவே இருந்தது.

எனினும் சீனாவை புறம்தள்ளும் நோக்குடன் அங்கு ஜனநாயகத்திற்கான ஆட்சியை கொண்டு வருதல் என்ற நடவடிக்கையில் மேற்குலகம் தீவிரமாக இருந்தது. 1988 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட மாணவர் போராட்டத்தை இராணுவம் அடக்கிய போது 5000 பேர் கொல்லப்பட்டாலும், அங்கு ஜனநாயகம் மெல்ல மெல்ல வளர்வதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அழுத்தம் இராணுவ அரசை தேர்லை நடத்துவதற்கு நிர்ப்பந்தித்தது.

இது அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது, சூகிக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. சீனாவின் கொல்லப்புறத்தில் அமெரிக்க பெற்ற வெற்றியை தொடர்ந்து, 22 ஆண்டுகளின் பின்னர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா மியான்மாருக்கான தனது தூதுவரை நியமித்தது.

im 293665 இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டி - கைமாறியது மியான்மார் -	வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சூகி அடிக்கடி அமெரிக்க தூதரகத்திற்கு சென்றார், அதன் பின்னர் கூகுள், பெப்சி போன்ற நிறுவனங்கள் மியான்மாரில் தமது முதலீடுகளுக்கான இடங்களை தேடின. 2018 ஆம் ஆண்டு மியான்மார் மக்களின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு என அமெரிக்க மையமும் அங்கு திறக்கப்பட்டது. அங்கு ஆங்கில மற்றும் கணணி பயிற்சிகள் வழங்கப்பட்டன. சூகி அமெரிக்கா சென்று ஒபாமா மற்றும் கிலாரி கிளிங்டன் ஆகியோரையும் சந்தித்தார். 2011 ஆம் ஆண்டு மியான்மாரில் ஜனநாயக ஆட்சி மலர்ந்த நேரம் சீனாவின் 3.6 பில்லியன் டொலர் மின்உற்பத்தி திட்டத்தை மியான்மார் கைவிட்டது. இவை சீனாவின் முதலீடுகளுக்கு ஆபத்தாக மாறியதை சீனா உணர்ந்து கொண்டது.

சூகியை தவிர்த்து படை அதிகாரிகளுடன் உறவை வளர்த்துக் கொண்டது சீனா. 2013 ஆம் ஆண்டில் இருந்து படை அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என 1000 பேருக்கு மேற்பட்ட பிரதிநிதிகளை அழைத்து சீனா உபசரித்ததாக ஜங்கூனை தளமாகக் கொண்ட சிந்தனைக்குழாம் தெரிவித்துள்ளது.

ஆனால் 2012 ஆம் ஆண்டு பௌத்தர்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலவரம் 2017 ஆம் ஆண்டு இனப்படுகொலையாக மாற்றம் பெற்றது. சமாதான புறாவாக பதவியேற்ற சூகி பின்னர் இனப்படுகொலை இராணுவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தோன்றியும் இராணுவத்தை காப்பாற்ற போராடினார், அங்கு இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை மறுத்தார்.

மியான்மீதான பிடியை மேலும் இறுக்க றோகிங்கியா பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலையை நோக்கி தமது பார்வையை திருப்பியது மேற்குலகம். அதனை எதிர்த்த சூகியும் அனைத்துலக மட்டத்தின் தனக்கிருந்த மதிப்பை இழந்தார்.

ஆனால் றோகிங்கியா விடயத்தில் சீனா மியான்மாருக்கு உதவியது. உயர் நிலை இராணுவ ஜெனரல் 2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சீனாவுக்கு சென்றார். சீனாவில் வழங்கல் பாதை திட்டத்திற்கு தாம் உதவுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த வருடம் சீனாவின் அரச தலைவர் ஜி ஜிபிங் மியான்மாருக்கு பயணம் மேற்கொண்டார். 20 வருடங்களுக்கு பின்னர் சீனாவின் உயர்மட்டத் தலைவர் மேற்கொண்ட பயணம் இதுவாகும்.

முதலில் சீனாவின் திட்டங்களை எதிர்த்த சூகி பின்னர் அதனை ஏற்றுக்கொள்ள இணங்கினார். எனினும் சீனா படை அதிகாரிகளையே நம்பியது. இதுவரையில் 24 பில்லியன் டொலர்கள் பெறுமதியான 34 அபிவிருத்தி திட்டங்களை சீனா அங்கு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் சூகியின் கட்சி பெரும்பான்மை வெற்றிபெற்று இராணுவத்தினரின் ஆதரவுக் கட்சியை தோற்கடித்திருந்தது. ஆனால் பூகோள அரசியல் போட்டி அங்கு மீண்டும் இராணுவ ஆட்சியை கொண்டுவந்துள்ளது.

ஓபாமா அரசு எடுத்த முயற்சியை அமெரிக்கா முழு முயற்சியுடன் தொடரவில்லை அதனால் அதான் இந்த நிலை என்கிறார் அனைத்துலக வியூகங்களுக்கான கற்கைத் துறையின் அதிகாரி ஜோர்ச் போலிங், ஆனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிக்கோபார் மற்றும் அந்தமான் தீவுகளில் சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எதிராக இந்தியா கடற்படைத் தளங்களை அமைப்பதை சீனா பார்த்துக்கொண்டிருந்காது. தற்போது இந்திய கடற்படைத் தளங்களை நேரிடையாக கண்காணிக்கும் தூரத்திற்குள் சீன வந்துள்ளது.

இராணுவப் புரட்சிக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புச் சபையில் கண்டனத் தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முற்பட்டபோதும் அதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது.

சீனாவுடன் இணைந்த ரஸ்யாவும் தமக்கு அதிக கால அவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளது. மியான்மார் மீது தடைகள் ஏதும் விதிக்கப்படாத வெறும் கண்டனத்தீர்மானத்தையே சீனா முறியடித்துள்ளது.

அது மட்டுமல்லாது, ஏற்றுமதி இறக்குமதி சட்டங்களை மீறி சில தொலைதொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக சூகி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவரையும், அவரின் கட்சியையும் நிரந்தரமாக அரசியலில் இருந்து அகற்றும் நடவடிக்கை என தெரிவிக்கின்றார் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட மியான்மார் ஊடகவியலாளர் தின் லி வின்.

மேற்குலகம் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் பேசினாலும், இந்தியா, கொரியா, ரஸ்யா மற்றும் யப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் மியான்மார் படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இராணுவம் இந்த தடைகள் குறித்து ஒருபோதும் கவலைப்படுவதில்லை.

சிறீலங்காவை பாதிக்காதவாறு சீனாவை கையாள இந்தியா நிக்கோபார் தீவுகளை தேர்ந்தெடுத்தால், சீனா மியான்மாரை தனதாக்கி அதனையும் முறியடித்துள்ளது. எனவே சிறீலங்கா தொடர்பில் இந்தியா அதிக கவனம் செலுத்துவதும், தமிழ் மக்களை அரவணைப்பதும் தான் எதிர்காத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது.