அரச அடக்குமுறையின் வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி பேரணி – பிமல் ரத்நாயக்க

அரசாங்கத்தின் அடக்கு முறைகளால் அதிருப்தியடைந்த தமிழ்மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி வரையான பேரணியாகும். எனினும், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யும் சரத் வீரசேகர போன்றவர்கள், பேரணியில் கலந்து கொண்டவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை, என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கடந்தகால அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்தப் போராட்டம் அமைந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைகள், அழுத்தங்களுக்கு எதிரான கிளர்ச்சியே அந்தப் பேரணியாகும்.

பேரணி ஆரம்பமான போது, சுமார் 20 பேர் மாத்திரமே இருந்தார்கள். எனினும், அதுநிறைவடையும் போது பெருமளவான மக்கள் திரண்டு பேரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். சரத் வீரசேகர உள்ளடங்கலாக தெற்கிலுள்ள அநேகமானோர் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே, அவர்கள் பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கருத்துக்களை வெளியிடவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படுவோரின் படங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று அண்மையில் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். உண்மையில் குற்றவாளிகளுக்குத் தண்டனைக்காலம் நிர்ணயிக்கப்படுவதற்கான காரணம், அக்காலப் பகுதியில் அவர்கள் தமது தவறை உணர்ந்து திருந்தி வாழவேண்டும் என்பதற்காகவேயாகும். இதனைப் புரிந்து கொள்ளாமல் குற்றவாளிகளின் புகைப்படங்களைப் பகிரங்கப்படுத்துவதாகக்கூறும் ஒருவரால், போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் உணர்வுகளை எவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்?” என்றார்.