தொற்றால் இறப்போரின் உடல்கள் எரியூட்டப்படுவதில் மாற்றமில்லை – சுகாதார தொழில்நுட்ப குழு

கொரோனா வைரஸால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்ற சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் சட்ட வைத்திய அதிகாரியான சன்ன பெரேரா தெரிவித்தார்.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படும் என்று கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இந்நிலையில், அது தொடர்பான தீர்மானங்களை விடயத்துடன் தொடர்புடைய தொழில் நுட்ப குழுவே எடுக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் குறித்த தொழில் நுட்பக் குழுவின் தலைவர் சன்ன பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “அரசியல் தீர்மானங்களுக்காக எங்களின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியாது” என்று கூறியுள்ளார். “விசேட வைத்திய நிபுணர்களை கொண்ட குழுவால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஆட்சியாளர்கள் மாற்ற முடியும்.

அதற்கு எமது குழுவால் எதிர்ப்பு வெளியிட முடியாது. ஆனால், எமது குழுவின் தீர்மானத்தை அரசியல் காரணங்களுக்காக மாற்றியமைக்க முடியாது. கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களைத் தகனம் செய்ய வேண்டும் என்ற சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என்று சன்ன பெரேரா மேலும் தெரிவித்துள்ளார