மியான்மரிகளை நாடுகடத்த திட்டமிட்டிருக்கும் மலேசியா

மியான்மரில் ஜனநாயக அரசு களைக்கப்பட்டு இராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில்,  மலேசியாவின் பிடியில் உள்ள 1,200 மியான்மர் நாட்டவர்களை நாடுகடத்த மலேசிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் மலேசியாவில் தஞ்சம் கோரிய அகதிகளாக உள்ள எவரையும் மியான்மருக்கு நாடுகடத்தக் கூடாது என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், மலேசியாவில் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள 1,200 மியான்மர்  நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டு நிலையில், அதில் அகதிகளையும் உள்ளனரா என்பதைக் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

மலேசியா குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள மியான்மர் நாட்டவர்களை அழைத்துக் கொள்ள 3 கடற்படை கப்பல்களை அனுப்புவதாக மியான்மர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மலேசியா இவர்களை ஒப்படைக்க ஒப்புக்கொண்டிருக்கிறது.

1,200 மியான்மர் நாட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ள மலேசிய குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி, அகதிகள் குறித்த எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

மலேசிய அரசு அகதிகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காத நிலையில், ஆவணங்கள் இல்லாத வருகைத் தரும் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்துகிறது. அந்த வகையில், மியான்மரைச் சேர்ந்த 154,000 தஞ்சக்கோரிக்கையாளர்கள் மலேசியாவில் தங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.