தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி- ஒத்திகை தொடங்கியது

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை  ஐந்து மாவட்டங்களில்  நடைபெறுகிறது என தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஒத்திகை ஒரே நாளில் நிறைவுபெறும் என்று தெரிவித்த அவர், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் அதனை செலுத்துவற்கான வழிமுறைகளை திருத்தி அமைப்பதற்கு இந்த ஒத்திகை உதவும் என்றார்.

மேலும் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், ”இந்த ஒத்திகையில் முதல் கட்டமாக 25 நபர்களுக்கு ஊசி போடுவதற்கான நடைமுறை சோதனை செய்யப்படும். உண்மையான ஊசி எதுவும் இன்று செலுத்தப்படமாட்டாது. 25 நபர்களுக்கு ஊசி செலுத்துவதற்கு என்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும், தடுப்பூசி செலுத்தும் மையங்களில் என்ன வசதிகள் தேவை என்பதை தெரிந்துகொள்வதற்காகவும், வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த ஒத்திகை பயன்படும்,” என்றார்.

இதே போல் இன்று இந்தியா முழுவதும் இன்றைய தினம் கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகை நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.