நாகாலாந்து முதல் மணிப்பூர் வரை பரவிய காட்டுத் தீ –  அணைக்க பெரும் முயற்சி

நாகாலாந்து மாநிலத்தின் துக்கோ பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள  காட்டுத் தீ தற்போது நாகாலாந்திலிருந்து  மணிப்பூர் மாநிலத்திற்குப் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயை அணைக்க   இந்திய விமானப்படை,தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ”தீயை நேரில் பார்த்த மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள மாவோ பகுதியைச் சேர்ந்த மாநில வனத்துறை ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் புதன்கிழமை வரை நாகாலாந்து காடுகளில் மட்டுமே பெருகி வந்தது. அதன் பின்னர் வியாழக்கிழமை மணிபூர் மலைகளுக்கு பரவியது. இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 7 குழுக்கள் காட்டுத்தீயை அணைக்க விரைந்துள்ளது” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில்,

“நேற்று, நாகாலாந்தின் கோஹிமாவுக்கு அருகிலுள்ள துக்கோ பள்ளத்தாக்கில் தீயணைப்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் மி -17 வி 5 உலங்குவானுார்தி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஒன்பது டன் சுமைகளை தாங்கக்கூடிய சி -130 ஜே ஹெர்குலஸ் விமானம் 48 தேசிய பேரிடர் மீட்புப் படையின் பணியாளர்களுடன் கவுஹாத்தியில் இருந்து திமாபூருக்கு சென்றுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிப்பூர்-நாகாலாந்து எல்லையில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்குக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  உறுதி அளித்துள்ளார்.