‘பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய்

 
பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்
பாதை காட்டிடும் புறப்பட்டு வா….

ஈழத்தை நோக்கிப்
பயணித்த பாதங்கள்
இடையினில் நிக்குது
பாரடா இளைஞனே
தேசத்தின் குரலாய்
அகிலத்தில் ஒலித்த
புரட்சிக் குரலது
கேட்குதா உனக்கு…
ஈரேழு வருடங்கள்
கடந்திட்ட போதும்
ஓயாமல் நின்று
அழைக்குது பாரு

அன்ரன் பாலசிங்கம்
அண்ணணாய் …
அரசியல் ஆசானாய் …
தத்துவ மேதையாய்த்
தமிழீழக் கனவுடன்
ஓயாது உழைத்தவர்
இன்றைக்குத் தானடா
ஓய்ந்து போனதாய்…
ஈரேழு வருடங்கள்
கடந்து போகுதே…
எண்ணத்தில் ஏற்றிப்
புறப்பட்டு வா!

தலைவரின் கரத்தினை
எழுபத்தி ஒன்பதில்
இறுகப் பிடித்தவர்
அகிலம் முழுவதும்
அரசியல் வெளியினில்
ஈழத்தின் குரலாய்
ஓங்கி ஒலித்தவர்
தலைவரின் சிந்தனை
அறிந்து கதைச்சவர்
அரசியல் மேசையில்
உரிமையைக் கேட்டுச்
சண்டைகள் செய்தவர்

இறுதி இலக்கதை
அடைந்திட முன்னரே
ஈழத்தின் கனவுடன்
இமைகளை மூடிய
தேசத்தின் குரலின்
பாதச்சுவடுகள்
காலச் சுழற்சியில்
அழிந்தா போயிரும்?
விட்ட இடத்தினில்
தொடர்ந்திட வேண்டும்
பாதை காட்டிடக்
காத்துக் கிடக்குதே
புறப்பட்டு வாடா !
பயணம் தொடர்வோம்!!

அரசியல் என்ற
அந்தக் களத்தில்
ஆடிய போரின்
குறிப்புகள் எல்லாம்
எமக்காய்த் தானே
எழுதியும் வைத்தார்
விடிந்திட வேண்டும்
ஈழத்தின் கிழக்கு
விடுதலை வேண்டும்
அடிமைகள் எமக்கு
அதற்க்காய் நடத்திய
யாகத்தில் எரிந்த
வீரரின் நினைவுகள்
சுமந்தே போவோம்

இன்றைய அரசியல்
களத்தினில் நின்று
போர்ப்பறை அடித்து
உரிமையைக் கேட்க்க
ஆருமே அற்ற
ஏதிலி எமக்காய்
பிரம்மஞானியின்
பாதச் சுவடுகள்
பாதையைக் காட்டும்
புறப்பட்டு வா!
இடையினில் நிற்க்கும்
பயணம் தொடர்ந்து
இலக்கதை அடைவோம்
உறுதியை எடுப்போம்

இதுதான் அவர்களின்
நினைவுகள் சுமந்து….
வாழும் எமது
கடமையை உணர்ந்து
அரசியல் களத்தினில்
புறப்பட்டுப் போவோம்
பாரினில் எமது
உரிமையைக் கேட்டுப்
போரதைச் செய்யப்
பயமது எதுக்குப்
பாதையைக் காட்டும்
பாதச்சுவட்டின்
ஆசான் அவரின்
வழியதைத் தொடர்ந்து
இலக்கதை அடைய
இன்றைய நாளில்
உறுதி எடுப்போம்…

தேசத்தின் குரலாய்ப்
பிரமஞானியாய்
எம்மோடு இருக்கும்
இலட்சிய நெருப்பை
நெஞ்சினில் சுமந்து
பயணத்தைத் தொடர்வோம்
பாதையைக் காட்டும்
பாதச் சுவடாய்
பாலா அண்ணன்
வழியதைக் காட்டப்
புறப்பட்டு வா!

ஈழத்தை அடைவோம்
ஈரேழு வருடங்கள்
கடந்தால் என்ன
அவரின் நினைவுகள்
சுமக்கும் எமக்குள்
அச்சம் எதுக்குப்
புறப்பட்டு வா!