உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், டிசம்பர் 14ஆம் திகதி ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக  அறிவித்துள்ளனர்.

மேலும் ராஜஸ்தானில் இருந்து டெல்லி வரும் ஜெய்பூர் – டெல்லி நெடுஞ்சாலையிலும் விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

இதற்கிடையே விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த இரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், விவசாயிகள் போராட்டத்தை நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஊடுருவி வழிநடத்தாவிட்டால், புதிய விவசாய சட்டங்களில் விவசாயிகளுக்கு நன்மை உண்டு என்பதை ஏற்பார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசின் கதவுகள் 24 மணி நேரமும் திறந்திருப்பதாகவும் அவர் தெரித்துள்ளார்.