கொரோனா அச்சம் – 20 இலட்சம் புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் தவிப்பு- ஐநா

கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாடு திரும்ப விரும்பிய 20 இலட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்ட அறிக்கையில், “உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல விரும்புகின்றனர்.

இந்த நிலையில் பல நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதால் அவர்கள் தாங்கள் பணிபுரியும் நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். எல்லை மூடல் நடவடிக்கையால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய  கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும்  இந்த வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இவ்வருட இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.