சிங்களவர்களுக்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களை பலவீனப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகள்

இலங்கைத் தீவு முழுவதும் ஈழத் தமிழினத்தின் தாயகமாகும். ஈழத் தமிழினத்தின் வரலாறு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஈழத்தில் நாகர்கள், இயக்கர்கள் என்ற தமிழினத்தின் மூதாதையர்களே வாழ்ந்து வந்தனர். ‘எலு’ என்ற தமிழ் மொழியின் ஆதி வடிவத்தை இவர்கள் பேசியதோடு,இலங்கை முழுவதையும் ஆண்டனர்.

இந்த வேளையில் தான் ஈழத்தின் அண்டை நாடான இந்தியாவின் கலிங்க தேசத்தின் இளவரசன் விஜயனும் அவனது தோழர்கள் எழுநூறு பேரும் அந்த நாட்டில் துர் நடத்தைகளில் ஈடுபட்டதனால், அந்த நாட்டு மன்னரால் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்தனர். இவர்களின் வருகை ஈழத்தில் சிங்கள இனத்தின் தோன்றலுக்கு வழிவகுத்ததோடு, இலங்கைத் தீவில் சிங்கள அரசின் தோற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. இந்திய நாட்டின் வழித்தோன்றல்களான இவர்களின் வருகையே ஈழத்தில் தமிழர்களின் அரசு, சிங்களவர்களின் அரசு என்ற இரு அரசுகள் உருவாவதற்கும் காரணமாக அமைந்தது. இதிலிருந்து சிங்கள இனத்தினதும் அதன் உருவாக்கத்திலும் இந்தியத் தொடர்பு கொண்டிருந்ததை அறிய முடிகிறது.

மேலும்,

*சிங்கள இனத்தின் தோற்றமும் அதன் அரசின் உருவாக்கமும் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களால் உருவாக்கப்பட்டது என்ற நிலையையும்,

*ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவின் பகுதியான தமிழர்களின் தாயகமான தமிழகத்திற்கும் இடையேயான தொப்புள் கொடி உறவு நிலைகளும்,

*இலங்கைத் தீவில் தமிழ் அரசின் உருவாக்கம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற இந்தியாவின் எண்ணங்களும் இலங்கைத் தீவில் தமிழர்களின் ஆட்சியுரிமையை இந்தியா மறுத்து வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

ஈழத்தில் கி.பி.15ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக தமிழர்களின் இராச்சியப் பகுதியும், சிங்களவர்களின் இராச்சியப் பகுதியும் வெவ்வேறாகவே இருந்தன. 1505ஆம் ஆண்டில் இலங்கைத் தீவை போர்த்துக்கேயர்கள் முதலில் ஆக்கிரமிக்க வந்த போது, சிங்கள இராச்சியப் பிரிவு மன்னர்கள் போர்த்துக்கேயரை எதிர்த்துப் போரிடாமல் அனைவரும் சரணடைந்தனர். ஆனால் தமிழ் மன்னர்கள் போர்த்துக்கேயரை எதித்துப் போராடி வீரச்சாவடைந்தனர்.

போர்த்துக்கேயரைத் தொடர்ந்து 1658இல் ஒல்லாந்தர் தீவை ஆக்கிரமித்த போதும், இவ்வித அந்நியர்களும் இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் இவர்களைத் தொடர்ந்து 1796இல் ஆக்கிரமித்து ஆங்கிலேயர்கள் இலங்கை முழுவதையும் கைப்பற்றி 1931இல் உருவாக்கப்பட்ட கோல்புறூக் – கமரூன் அறிக்கையின்படி இலங்கை முழுவதும் ஒற்றையாட்சி முறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த நிலை 1948இல் இலங்கை சுதந்திரமடையும் வரை தொடர்ந்தது. இதனால் தமிழர்களின் இறையாண்மையும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டு தமிழர்கள் சிங்கள இனவாத அரசுகளாக ஆளப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பிரித்தானியர்கள் இந்தியாவையும், இலங்கையையும் ஆக்கிரமித்து அந்த நாடுகளைவிட்டு வெளியேறிய போது, 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவிற்கும் 1948 பெப்ரவரி 04ஆம் நாள் இலங்கைக்கும் சுதந்திரம் வழங்கினர். இதன்போது இந்தியா என்ற நாட்டிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டதோ அதேபோன்று இலங்கைத் தீவிலும் வெவ்வேறாக ஆட்சி புரிந்த தமிழர்களின் இராச்சியமும், சிங்களவர்களின் இராச்சியமும் ஒன்றிணைக்கப்பட்டு இலங்கை என்ற நாட்டிற்கும் பிரித்தானியர் சுதந்திரம் வழங்கினர். இந்த நிலை இன்று வரை தொடர்ந்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும், ஆட்சியுரிமையும் சிங்கள இனவாதிகளால் மறுக்கப்பட்டு வருகிறது. இதனையே இந்தியாவும் ஏற்று இந்தியாவைப் போன்று இலங்கையும் ஒற்றையாட்சி முறையின் கீழ் செயற்படுவதையே விரும்புகிறது. இதனால் ஈழத் தமிழர்கள் சிங்கள இனவாத அரசுகளின் சட்டங்களாலும் திட்டங்களாலும் பாதிக்கப்பட்டு அல்லல்பட்டு அவலமான நிலையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியா, சிங்கள இனவாத அரசுகள் சார்பான ஆதரவு நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதோடு இலங்கை இந்தியாவின் நட்புநாடு என்றும் கூறிவருகின்றது. அத்துடன் ஈழத் தமிழினத்தை பலவீனப்படுத்தி அவர்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை மறுத்தும் வருகின்றது.

ஆனால் இலங்கையை ஆளும் சிங்கள அரசுகள் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இந்தியாவிற்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றன. இதற்கான பல முக்கிய எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

*இந்தியா – சீனாவிற்கிடையேயான போர் ஏற்பட்ட போதும், இந்திய – பாகிஸ்தான்     போரின் போதும் சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கான ஆதரவு நிலையை இலங்கை   எடுத்திருந்தது.

*1983இல் ஈழவிடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற போது, இந்தியாவின்பங்களிப்பு   அதிகரித்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான பல சர்வதேச புலனாய்வு  அமைப்புக்களை இலங்கைக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தின.

*1987 ஆடி 29இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது கடற்படைச் சிப்பாயால் தாக்கப்பட்டதை, சிப்பாய்க்கு sun stroke என சிறீலங்கா அதிபர் J.R.ஜெயவர்த்தனா தெரிவித்து எள்ளி நகையாடினார்.

*1990இற்குப் பின்னர் இந்தியாவைப் புறந்தள்ளி சீனாவினது செயற்பாடுகளான இலங்கையில் அதிகரித்து சீனாவை அரவணைத்து இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.

*இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்து வருகின்றன. இதற்கு அண்மையில் 25.09.2020 அன்று இந்தியப் பிரதமர் மோடி அவர்களால் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களிடம் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி வலியுறுத்தியதை கூறமுடியும்.

ஆனால் தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவான நிலையை என்றும் கொண்டிருந்தாலும் ஈழத்தமிழினத்திற்கு எதிராகவே இந்தியா செயற்பட்டு வருவதை காண முடிகின்றது. அத்துடன் ஈழத் தமிழினத்தை  இந்தியா பலவீனப்படுத்தியும் வருகின்றது. இதற்கான பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறவேண்டியும் உள்ளது.

*1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததுடன் இந்தியத் தமிழர்களை இலங்கையை விட்டு வெளியேறச் செய்வதும், அவர்களை நாடற்றவர்களாக ஆக்கும் பிரஜா உரிமைச் சட்டம், வாக்குரிமைச் சட்டங்களை இந்தியா ஏற்றுக் கொண்டு சிங்கள அரசுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து இலங்கையில் தமிழர்களின் குடித்தொகைப் பரம்பலைக் குறைத்தது.

*1983இல் ஏற்பட்ட ஈழவிடுதலைப் போராட்ட எழுச்சியின் போது பல ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கு பயிற்சியளித்து ஆயுதம் வழங்கி அவ் அமைப்புக்களை இந்திய ஆளுகையின் கீழ் செயற்படும் நிலையை உருவாக்க எண்ணியதோடு, அவற்றை தனது தேசநலனுக்கான அமைப்புகளாக மாற்ற நினைத்தது.

*1985இல் பூட்டான் தலைநகர் திம்புவில் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்களுக்கும் இலங்கை அரசுக்கிடையேயான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைகளை மறுத்த இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டது.

*1987இல் தமிழர்கள் ஏற்க மறுத்த இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எழுதி ஈழத் தமிழர்களை ஒரு சமூகக் குழுவாக அதில் காட்டி ஈழத் தமிழினத்தின் இன அடையாளத்தை மறுத்தது.

*இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் ஆயுதங்களை கையளிக்க வைத்து, இவ் அமைப்புக்களிடையேயான முரண்பாடுகளை உருவாக்கி ஈழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தியது.

*இவ் ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபை என்ற அமைப்புக்களின் மூலம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வாக முன்வந்து தமிழர் தாயத்ததை துண்டாடும் வகையில் வடக்கு, கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை பிரிக்கும் கபடமான சூழ்ச்சித் திட்டத்தை உருவாக்கியது. அத்துடன் இந்த மாகாண சபைகளுக்கு நிதி, காவல், காணி ஆகிய முக்கிய உரிமை அதிகாரங்களும் கொண்ட அமைப்பாக இருக்க சிங்கள அரசுக்கு உதவியது.

*இவ் ஒப்பந்த காலத்தில் தமிழின உரிமைகளுக்கான போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்திய போராளி திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோரது போராட்டங்களை அவமதித்து, அதை ஏற்க மறுத்தது, அகிம்சை தேசமான இந்தியா.

*இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் ஈழத் தமிழினத்திற்கு எதிரான போரை இரு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி 1500இற்கும் மேற்பட்ட போராளிகளையும் 6000இற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களையும் கொன்றழித்தது.

*இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த போது, 1988இல் வடக்கு கிழக்கு மாகாணங்களை துண்டாடும் வெலிஓயாத்(மணலாறு) திட்டத்தை சிங்கள அரசு திட்மிட்டு தமது அரசிதழில் வெளியிட்ட போது அதனைக் கண்டும் காணாமல் இருந்தது.

*இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டு ஈழத் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்டும், இப்படையின் மீதான சிங்கள இனவாதிகளின் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் சிங்கள அரசுக்கும் சார்பாகவே செயற்பட்டது.

*இறுதிக்கட்ட ஈழப் பேரின் போது சிங்களப் படைகளுக்கு ஆயுதம் வழங்கியது.

*இறுதிக்கட்ட ஈழப் போரில் நடைபெற்ற ஈழத்தமிழினப் படுகொலைகளை கண்டும் காணாமல் இருந்ததோடு, இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசைக் கண்டிக்காது, அதை புரிந்த மகிந்த ராஜபக்ஸ அவர்களை இந்தியாவிற்கு வரவழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கியதுடன் இனப்படுகொலையை சர்வதேசமயப்படுத்த மறுத்தும் வருகின்றது.

இவற்றிலிருந்து ஈழத் தமிழினம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும். ஈழத் தமிழினத்திற்கான தீர்வாக ஈழத் தமிழினத்தை பலவீனப்படுத்துவதையும், தமது தேச நலனைக் காப்பதையும் நோக்கத்தை கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடியும். அத்துடன் சிங்கள அரசுகளுக்கு ஆதரவாகவே என்றும் செயற்படும் என்பதையும் அறியலாம்.

-அன்பன்-