எரிமலைத்தீவுக்கு மாற்றப்படும் இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகள்? 

இங்கிலாந்தில் படகு வழியாக தஞ்சமடைபவர்களை எரிமலைத்தீவான Ascension தீவில்  அடைப்பதற்கான இங்கிலாந்து உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேலின் முன்மொழிவு ஆஸ்திரேலியாவின் இனவாத அகதிகள் கொள்கையை பின்பற்றும் செயல்பாடு என ஆஸ்திரேலிய Solidarity அமைப்பின் உறுப்பினர் Chris Breen விமர்சித்துள்ளார்.

Ascension எனும் தீவு இங்கிலாந்திலிருந்து சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் அமைந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்களை பப்பு நியூ கினியா, நவுரு உள்ளிட்ட  கடல் கடந்த தடுப்பில் ஆஸ்திரேலிய அரசு காலவரையின்றி சிறைப் படுத்தியுள்ளதாகவும் இந்த வகையிலேயே புதிய காலனியவாதத்தை ஆஸ்திரேலியா பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அந்த வழியிலேயே அகதிகளை சட்டவிரோத குடியேறிகளாக ப்ரீத்தி பட்டேல் அடையாளப்படுத்துவதாக அவர் விமர்சித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்ட 13 அகதிகள் உயிரிழந்திருப்பதாக தனது கடிதத்ததில் கூறியுள்ள Chris Breen, இம்முகாம்கள் சித்திரவதை முகாம்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிய அளவிலான படகுகளை பயன்படுத்தி ஆபத்தான கடல் வழி பயணங்களை மேற்கொண்டு வரும் அகதிகள் தொடர்பான ஆஸ்திரேலியாவின் தீர்வு, பின்பற்றுவதற்கான ஒரு மாதிரி அல்ல என Chris Breen தெரிவித்திருக்கிறார்.