ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் உடலில் கொடிய விஷம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி உடலில் கொடிய விஷம் கலந்திருப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜேர்மனி அரசு தெரிவித்த அறிக்கையில், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி தொடர்ந்தும் ஆபத்தில் உள்ளார். நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கொடிய விஷம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விஷம் ரஷ்யாவிலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டது. நவால்னி மீதான இந்த தாக்குதலை ஜேர்மனி கடுமையாக கண்டிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புட்டினையும், அவரது ஊழலையும் நவால்னி கடுமையாக எதிர்த்து வந்ததால், தேர்தல் பிரச்சாரத்தில் நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால் புட்டின் அரசு அவர்மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி, அவரை தேர்தலில் போட்டியிடாமல் செய்தது. இருந்தாலும் நவால்னி ரஷ்ய அதிபரை பொதுவெளியில் விமர்சித்து வந்திருந்தார்.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை டாம்ஸ்க் நகரிலிருந்து மொஸ்கோவிற்கு விமானத்தில் செல்லும்போது அவர் மயங்கி விழுந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கோமா நிலைக்கு சென்றதால், மேலதிக சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

நவால்னி குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.