மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்திய பின்னரே பெருந்தோட்டக் கம்பனிகளுடன் புதிய குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்று அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தாமல் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது பொருத்த மற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் மூலம் 200 ரூபாய் சம்பள உயர்வு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தியுள்ளார்.
மலையக மக்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல், பெருந்தோட்டத் தொழில்துறைக்காக ஒதுக்கப்பட்ட 13,000 மில்லியன் ரூபாய் நிதியை மலையக மக்களுக்காக ஒதுக்கியதாகக் கூறுவது தவறானது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்காகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதைப் புரிந்துகொள்ள முடியும் என்றாலும், ஆட்சியை நடத்துவதற்காகப் பொய்யான தகவல்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், அப்பாவி மலையக மக்களை ஏமாற்றுவோருக்குத் தலையில் இடி விழும் என்றும் எச்சரித்துள்ளார்.
பெருந்தோட்டக் கம்பனிகளுடன் புதிய குத்தகை ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், இது தொடர்பில் தகுந்த யோசனைகளை முன்வைத்துக் கலந்துரையாடித் தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 பேர்ச்சஸ் குடியிருப்புக் காணி வழங்கப்பட வேண்டும் என்றும், தோட்டத்தில் பணியாற்று பவர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் இந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மனோ கணேசன் வலியுறுத் தியுள்ளார்.
திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் தனிக் குடும்பமாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கொள்கைப் பிரகடனத்திலும், 2023ஆம் ஆண்டு அரசாங்கத்தின் ஹட்டன் பிர கடனத்திலும் பயிரிடப்படாத தரிசு நிலங்களைத் தோட்ட இளை ஞர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், இதுவரை அவ்வாறான காணிகள் வழங்கப் படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால், தனியார் கம்பனிகளுக்குக் காணிகளைப் பகிர்ந் தளிப்பது எந்த வகையில் நியாயமானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.பெருந்தோட்டப் பகுதிகளில் தரிசு நிலங்களாக உள்ள காணிகளை முதலீட்டு நோக்கத்துக்காகத் தனியார் நிறுவனங் களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள் ளது.
குறித்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கருத்து வெளியாகியுள்ளது. இதேவேளை, பெருந்தோட்டக் காணிகளைப் பெருந்தோட் டக் கம்பனிகளுக்கு மீண்டும் குத்தகைக்குக் கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்றும், தொழிற்சங்கங்களான தங்களுடனும் கலந்துரையாட வேண்டும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான காணிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தரிசு நிலங்கள் மலையக இளை ஞர்களுக்குத் தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்பட வேண்டும். மலையக மக்களுக்குச் சாதகமான முறையில் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, மலையக மக்களுக்கு முறையான காணி உரிமையை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி, ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகளின் ஏற்பாட்டில், ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மலையக மக்களுக்கு இதுவரை முறையான காணி உரிமை வழங்கப்படாமையினால் அவர்கள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
மலையக மக்கள் இன்றும் சொந்த முகவரி யற்றவர்களாகவும், காணியற்றவர்களாகவும், சொந்த வீடுகளற்றவர்களாகவும் வாழ்ந்து வருவதால், ஏனைய சமூகத்தினருக்குக் கிடைக்கும் பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதில் சிரமங் களை எதிர் கொள்வதாகப் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையி லான தற்போதைய அரசாங்கம், மலையக மக்களுக்குக் காணி உரிமையை வழங்குவதாக உறுதியளித்தே ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மலையகப் பகுதிகளில் சுமார் 41 ஆயிரம் ஹெக்டேர் பயிரிடப்படாத தரிசு நிலங்கள் காணப்படுவ தாகவும், அவற்றை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் நீண்டகாலமாக நிலவிவரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மக்களுக்குக் காணிகளை வழங்குவதற்குப் பதிலாக, தனியார் துறையினருக்குக் காணிகளை வழங்கு வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
எனவே, மலையக மக்களுக்கு உடனடியாகக் காணி உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தவறினால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.



