இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாகப் பெருந் தோட்டத் துறையைக் கட்டமைத்த மலையகத் தமிழ் மக்கள், கடந்த பல தசாப்தங்களாக வரலாற்று ரீதியான புறக்கணிப்புகள், சட்ட ரீதியான உரிமைப் பறிப்புகள் மற்றும் கட்டமைப்பு சார்ந்த அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, 1948 நவம்பர் 15ஆம் திகதி அன்று நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டமும், அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல் திருத்தச் சட்டங்களும் ஒரு சமூகத்தின் அரசியல் இருப்பையும், குடியுரிமையையும், எதிர்காலத்தையும் ஒரே இரவில் கேள்விக்குறியாக்கிய முக்கிய திருப்புமுனைகளாகும்.
வரலாற்றுப் பின்னணியும், உரிமைப் பறிப்புகளின் தொடர்ச்சியும் 1946 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 11.7% (ஏறக்குறைய 7,80,600 பேர்) கொண்ட பெரிய சமூகமாக மலையகத் தமிழ் மக்கள் திகழ்ந்தனர். 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், மொத்தமுள்ள 95 நாடாளுமன்ற ஆசனங்களில் மலையகப் பிரதிநிதிகளாக 7 உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டனர். மேலும், சுமார் 20 தேர்தல் தொகுதிகளில் இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மலையக மக்களின் வாக்குகள் அமைந்தன. மலையக மக்களின் வளர்ந்து வந்த அரசியல் செல்வாக்கைக் கருத்திற் கொண்டு, அப்போதைய ஆளும் தரப்பினர் 1948 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தையும், 1949 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றினர்.
இதன் விளைவாக, பெருமளவிலான மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டு, வாக்குரிமையை இழந்தனர். இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட தருணத்தில், அப்போதைய அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுகள் மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே பல்வேறு விமர்சனங்களும் ஆய்வுகளும் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் வாக்குரிமை பறிக்கப்பட்டதன் காரண மாக, 1952 ஆம் ஆண்டு தேர்தலில் மலையக மக்களால் நேரடியாகப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலை உருவானது. இதன் விளைவாக 1964–1974 சிறிமா–சாஸ்திரி மற்றும் சிறிமா–இந்திரா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
நாடாளுமன்றத்தில் மலையக மக்களுக்கான நேரடிப் பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையே 1964 ஆம் ஆண்டு சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தமும் 1974 ஆம் ஆண்டு சிறிமா–இந்திரா ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப் பந்தங்களின் அடிப்படையில், சுமார் 6 இலட்சம் பேருக்கு இந்தியக் குடியுரிமையும், 3.75 இலட்சம் பேருக்கு இலங்கைக் குடியுரிமையும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. குடியுரிமை மற்றும் தாயகம் தொடர்பான இந்தத் தீர்மானங்களால் பல குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. பலர் நீண்ட காலம் நாடற்றவர் களாகவே வாழ்ந்தனர்.
1980களில் இனவழிப்பு
1970களின் முற்பகுதியில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உணவுப் பற்றாக்குறையின் போது, தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டனர். 1970கள் மற்றும் 1980களில் உருவான தீவிர அரசியல் மற்றும் இனவாத சூழல்களில், மலையகத் தமிழர்கள் சில வேளைகளில் சந்தேகத்திற்கும், அரசியல் முத்திரை குத்தல்களுக்கும் ஆளாகினர். 1977 மற்றும் 1983 காலகட்டங்களில் ஏற்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளின் போது, பெருந்தோட்டப் பகுதிகளிலும் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் இடப்பெயர்வுக ளும் நிகழ்ந்தன.
1985–2003: குடியுரிமை மீட்பும் சட்ட ரீதியான மாற்றங்களும் 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர்ச்சியான உள்நாட்டு–சர்வதேச அழுத்தங்களின் பின்னணியில், 1986 ஆம் ஆண்டு சட்டமூலம் சுமார் 94,000 பேருக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது. 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டமூலம், சத்தியக்கடதாசி (Affidavit) அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியாக, 2003 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நாடற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டத்தின் மூலம் இலங்கையில் வசித்த எஞ்சியிருந்த நாடற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது.
1946 ஆம் ஆண்டின் மக்கள்தொகை விகிதாசாரத்து டன் ஒப்பிடும்போது, உரிமைப் பறிப்புகளும், தாயகம் திரும்புதல்களும், இடப்பெயர்வுகளும் மலையக சமூகத்தில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தின. குறிப்பாக இந்த விடயம் மலையக அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், மக்கள்தொகை விகிதாசாரத்தின் அடிப் படையில் மலையக சமூகத்திற்கு இருந்திருக்கக்கூடிய பிரதிநிதித்துவ வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்தன. அத்துடன் தலைமுறை தலைமுறையாகத் தோட்டங்களில் உழைத்த போதிலும், சொந்த நிலம் மற்றும் வீட்டுரிமை இல்லாத நிலை பரவலாக நீடித்தது. சுயாதீனமான பொருளாதாரத் தளத்தை உருவாக்குவதில் இருந்த தடைகள், தோட்டத் தொழிலையும், குறிப்பிட்ட கட்டமைப்புகளையும் சார்ந்திருக்கும் நிலையை வலுப்படுத்தின.
மலையக மக்களின் வாழ்வியலில் இன்றுவரை தீராத பிரச்சினைகள் சட்ட ரீதியாகக் குடியுரிமை கிடைத்திருந்தாலும், அன்றாட வாழ்வில் மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகள் பல இன்றும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. பல குடும்பங்கள் இன்னும் லயன் அறைகளிலேயே வசிக்கின்றன. தனியான வீடுகள் கட்டப்பட்டாலும், காணிக்கான தனிப்பட்ட உறுதிப்பத்திரம் இல்லாததால், நில உரிமை முழுமையாக உறுதிப்படுத்தப் படாத நிலை உள்ளது. தோட்டப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய பௌதீக வளங்கள் இன்மை, உயர்கல்விக்கான இடைநிற்றல் விகிதம் போன்ற சவால்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
சுத்தமான குடிநீர், முறையான சுகாதார வசதிகள், மலசலகூட வசதிகள் மற்றும் தோட்டங்களுக்கு இடையி லான போக்குவரத்து வசதிகள் சில பகுதிகளில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப நிலையானதும் போதுமானதுமான நாளாந்த ஊதியம் தொடர்பான போராட்டங்கள் தொடர்கின்றன. இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறைவாக உள்ளன. பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிர் வாகங்களுக்குள் தோட்டப் பகுதிகளை முழுமையாக உள்வாங்கி, நேரடியான அரச சேவைகளைத் தடையின்றி வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நீடிக்கின்றன. வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைப் பதிவு செய்வதும், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் எதிர்காலத் திட்டமிடலுக்கு அவசியமானது.
எனினும் மலையக மக்களின் வாழ்வியலை மேம் படுத்த பல தசாப்தங்கள் கடந்தும் இதுவரையில் குறிப் பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் காணி உரிமை, சிறந்த கல்வி, சிறந்த ஊதியம் மற்றும் சிறப்பான சுகாதார வசதி போன்றவற்றுக்கான கோரிக்கைகள் நீடித்த வண்ணமே உள்ளன. மலையக மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதாயின் நில உரிமை மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடனும், நிரந்தர உரிமையுடனும் நிறைவேற்றுவது அவசியமாகும். கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்வாய்ப்புகளை விரிவுபடுத்தி, இளைஞர்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் தேசிய–சர்வதேச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னெடுப்பது இன்றியமையாததாகும். 1948-இல் பறிக்கப்பட்ட உரிமைகளையும், 78 ஆண்டுகால வரலாற்றுப் பாடங்களையும் தாண்டி, மலையகத் தமிழ் சமூகம் இன்று ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பு முனையில் நிற்கிறது. கடந்த காலத் துயரங்களை வெறும் நினைவுகளாக மட்டும் சுமந்து கொண்டிராமல், அவற்றை எதிர்கால எழுச்சிக்கான அடித்தளமாக மாற்றுவதே இன் றைய காலத்தின் கட்டாயமாகும்.
சட்ட ரீதியான குடியுரிமை மட்டுமே ஒரு சமூகத்தின் முழுமையான விடுதலையாகிவிடாது. சொந்த நிலம், தரமான கல்வி, சுயாதீனமான பொருளாதாரம் மற்றும் சமமான சமூக கௌரவம் ஆகியவை உறுதிப்படுத்தப்படும்போது மட்டுமே உண்மையான நீதி நிலைநாட்டப்படும். தலைமுறை தலைமுறையாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வியர்வை சிந்திய ஒரு சமூகம், இனியும் சலுகைகளுக்காகக் காத்திருக்கும் ஒரு பிரிவாக அல்லாமல், தமது தலை விதியைத் தாமே தீர்மானிக்கும் வலிமைமிக்க சக்தியாக உருவெடுக்க வேண்டும். கல்வியாளர்கள், இளைஞர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தூய நோக்கமுடைய தலைமைகள் அனைவரும் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்து செயற்படும்போது, இருண்ட வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் போட்டு, சுயமரியாதையும் பொருளாதார சுதந்திரமும் கொண்ட புதியதொரு விடியலை மலையக மண்ணில் நிச்சயம் உருவாக்க முடியும்.



