காணாமல்போன மகள் தொடர்பான விசாரணையில் காவல்துறை தாமதம் காட்டுவதாக முன்னாள் போராளி கவலை

காணாமல்போன தனது மகள் தொடர்பில் முறைப்பாடு செய்தும், காவல்துறை முறையானதும் விரைவானதுமான விசாரணைகளை நடத்தவில்லை என மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி காலை 9 மணியளவில் அரசடியில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு மகளை அழைத்துச் சென்றதாகவும், பிற்பகல் ஒரு மணிக்கு வகுப்பு முடிந்த பிறகும் அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சி.சி.ரி.வி. காணொளிகளைப் பார்த்த காவல்துறை, ஒரு வீதியைத் தாண்டி மகள் சென்றது வரை மட்டுமே பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளனர். அதற்குப் பின் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

ஜனாதிபதி செயலகம் ஊடாக பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம் அனுப்பப்பட்டும், விசாரணையில் வேகம் இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.

மகள் கடத்தி வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும், இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவங்களால் தமது குடும்பம் அச்சத்தில் உள்ளதாகவும் கூறிய அவர், மகளை உடனடியாக மீட்டுத் தருமாறு ஜனாதிபதியிடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.