செம்மணிக்கு வெளியே உள்ள புதைகுழிகளைக் காட்டுவதற்கு சோமரத்ன ராஜபக்ச நிபந்தனை

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அல்லது இந்த வழக்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் முழுமையாக விசாரணைக்குப் பொறுப்பேற்றால், செம்மணி மனிதப் புதைகுழிக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என மரண தண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் உள்ள இவர், செம்மணி மனிதப் புதைகுழி பற்றி முதலில் வெளிப்படுத்தியவர் ஆவார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி சிறைச்சாலைக்குச் சென்ற குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதன்போது, மயானப் பகுதியில் மற்றவர்கள் மூலம் உடல்கள் புதைக்கப்பட்டதால் அவற்றைத் தன்னால் தனியாகக் காட்ட முடியாது எனவும், மயானத்துக்கு வெளியே தாம் புதைத்த ஏனைய இடங்களைக் காட்ட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் வைத்துப் பதிவு செய்யப்பட்ட இந்த வாக்குமூலத்தின் விபரங்களை அவர் தமது குடும்பத்தினர் ஊடாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, புதைக்கப்பட்ட உடல்கள் தொடர்பில் முக்கியத் தெளிவுபடுத்தலொன்றையும் அவர் வழங்கியுள்ளார். விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாகத் தாம் கூறவில்லை என்றும், படையினரால் சந்தேகிக்கப்பட்டவர்கள் மற்றும் சாதாரண மக்களின் உடல்களே புதைக்கத் தரப்பட்டன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.