முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் விளக்கமளிக்க, எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மீண்டும் அந்த நாட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, கோட்டாபய ராஜபக்ச சார்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
எனினும், வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் எவரும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் சிலருக்கு நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சிறைச்சாலை ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்த நீதிபதிகள் ஆயம், அன்றைய தினம் நாமல் ராஜபக்சவைச் சிறைச்சாலை ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.



