அனோஜனின் தண்டனைக்கு எதிராக சவுதி அரேபியாவில் மேன்முறையீடு

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையைக் குறைக்குமாறு கோரி அந்த நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தரப்பிலிருந்து அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக, மேலதிக மன்றாடியார் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அசாத் நவாவி உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் கடந்த 6 ஆம் திகதி சவுதி அரேபியாவுக்குப் பயணமாகினர்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது தொடர்பில் அவர்கள் நேற்று (09) சவுதி அரேபிய சட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த மேன்முறையீட்டின் மூலம் சாதகமான முடிவு கிடைக்காவிட்டால், சவுதி அரேபிய மன்னரிடம் கருணை மனுவொன்றைச் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் எனக் கோரி, ராமஞ்ஞ மகா நிக்காய மற்றும் அமரபுர மகா நிக்காய ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்தொன்றின் காரணமாக, சவுதி அரேபியாவின் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பத்தில் அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்திருந்தது.

எனினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக அனோஜனின் சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, சவுதி சட்ட அதிகாரிகள் எதிர் மனுவொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இருதரப்பு மேன்முறையீடுகளையும் பரிசீலித்த நீதிமன்றம், பின்னர் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், தொழில் நிமித்தம் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.