மக்கள் இறைமையை தமது அறிவாலும் பொருள்வளத்தாலும் மக்கள் தாங்களே பாதுகாக்க வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 412

உலகின் 2026ஆம் ஆண்டு அரசியல் மாற்றங்கள் எந்த ஒரு மக்களது மக்கள் இறைமையையும் மக்களே தமது அறிவாலும் பொருளாதாரப் பலத்தாலும் தாங்களே பாதுகாக்க வேண்டிய நிலையை உருவாகியுள்ளது.
பிரித்தானிய மக்களுக்குக் கூட இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளமையையே பிரதமர் அன்டி பேர்ணம் அவர்கள் யேர்மனிக்கு அவர் மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டுமென்னும் கருத்தை லேபர்கட்சியின் லிவர்பூல் மாநாட்டில் கூறியவுடனேயே சென்றமை எடுத்துக்காட்டுகிறது. ஐரோப்பியக் கண்டத்தின் ஒரு நாடாகிய பிரித்தானியா ரஸ்யா ஐரோப்பிய நாடுகளின் மேல் தொடங்கியுள்ள கலப்புநிலை போருக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தே அதனை எதிர்கொள்ள வேண்டியதாகவுள்ளது. கூடவே ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான நாளொன்றுக்கான வர்த்தகத் துண்டுவிழும் தொகை சீனா சார்பாக ஒரு மில்லியன் டொலர்களாக அமைந்து சீனாவின் பொருளாதாரக் காலனித்துவ நாடுகளாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன.  சீனாவில் இருந்து ஐரோப்பிய தொழில்துறை இறக்குமதி செய்கின்ற உதிரிப்பாகங்கள் (Components) மற்றும் அறிவியல் தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு துறைகளுக்கான குறைக்கடத்திகள் (Semi Conductors) வழியாகவே இந்த வர்த்தகத் துண்டுவிழும் தொகை அமைவதால் இது குறித்து ஒரு பொருளாதார சமநிலையை ஏற்படுத்துவதற்குப்  பேசுவதற்கு ஐரோப்பிய ஒன்றியக் குழு சீனாவுக்கே சென்றுள்ளது. அதேவேளை யேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தி (Made in Europe) ஐரோப்பாவின் உற்பத்திகளுக்குப் போட்டு இந்தப் பதிவு இல்லாத பொருள்களுக்கு இறக்குமதி வரி உயர்வைச் செய்வதற்கான சட்டத்தையே ஐரோப்பிய ஒன்றியத்துள் கொண்டு வந்துவிட்ட நிலையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துள் இல்லாததினால் பிரித்தானியாவின் பொருளாதாரம் பலமாகப் பாதிப்படையும் சூழ்நிலை இயல்பாகிறது.  இதனால் பிரித்தானியா மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்துள் இணைவதற்கு இடையில் கனடா கூட்டுறுப்பு நாடாக வந்தது போலவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத சுவிட்சர்லாந்து, நோர்வே போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கொண்டுள்ளன போன்ற முறைமைகள் வழியாகவோ இந்தப் பிரச்சினைக்கு பிரித்தானியா தீர்வு காண வேண்டிய நிலை உள்ளமையே பிரித்தானியப் பிரதமர் அவசர அவசரமாக யேர்மனி சென்றதற்கான சில காரணிகளாகவுள்ளன.
அதே வேளை நான்கைந்து மாதங்களில் மத்திய கிழக்கு போர்கள் மற்றும் ரஸ்யா உக்ரேன் போர்கள் என்பவற்றால் ஏற்படும் எண்ணெய் வழங்கல் பிரச்சினைகளால் பட்டினி நிலை உலகில் தோன்றலாம் என சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கையை உலகிற்கு விடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் முனைவர் ஜெயசங்கர் சுப்பிரமணியம் அவர்கள் உக்ரேனுக்கு நேரடியாகவே சென்றமை உலக அமைதிக்கான முயற்சியாகவே ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
இவைகள் ஒருபுறமிருக்க அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் 01. நான் நடுநிலை வகித்து,  “இந்தியா- பாகிஸ்தான், 02. இஸ்ரேல் – ஈரான், 03. கம்போடியா – தாய்லாந்து, 04. செர்பியா – கொசோவோ, 05. ருவாண்டா – காங்கோ, 06. எகிப்து – எத்தியோப்பியா, 07. ஆர்மீனியா – அஜர்பைஜான் 08. இஸ்ரேல் – லெபனான் என எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன். இதனால்  அமைதிக்கான நோபல் பரிசைப் பெற நானே   தகுதியுள்ளவன். இது எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்யாத சாதனை ” என அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த 07ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாண்டுக்கான நோபல் பரிசுகள் சுவீடனில் நோபல் பரிசுத் தெரிவுக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில்  பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவர் அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் நாளில் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரசுக்கும் அமெரிக்க செனட்டுக்குமான பகுதித் தேர்தல்களில் தனது குடியரசுக் கட்சியினர் வெற்றி பெறுவதற்கு இவற்றைத் தனது சாதனையாக  வெளிப்படுத்தி மக்களின் வாக்கை கவரும் முயற்சியாகவும் நோபல் பரிசுத் தெரிவுக் குழுவினருக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கவும் இவ்வாறு பேசியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் இந்த பேச்சு அமெரிக்கா தனது வல்லாண்மையைப் பயன்படுத்தி அனைத்துலக நாடுகளிலும் மக்களின் இறைமையை மேலாண்மை செய்கின்றது அல்லது செய்ய முயல்கின்றது என்பதும் பகிரங்கமாக உறுதியாகியுள்ளது.
வான்வெளிக் கட்டுப்பாடு அணுவாயுதப் பலம் ட்ரம்பின் மொழியில் “சூப்பர் இன்டலிஜென்ட்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு என்னும் மூன்று பலங்களையும் பயன்படுத்தி அமெரிக்கா உலகில் எந்த மக்களது இறைமையையும் கட்டுப்படுத்தும் உலக சக்தியாக ட்ரம்பின் அமெரிக்கா தன்னை முன்னிலைப்படுத்த முயன்று வருகின்றார். அவருடன் சில ஆண்டுகளாக முரண்பாட்டுடன் இருந்த எலான் மஸ்க்குக்கு  தேசிய அறிவியல் பதக்கத்தை ட்ரம்ப் வழங்கி அவரை “நவீன கால தோமஸ் எடிசன்” எனப் புகழ்ந்துள்ளமையும் எலான் மஸ்க்கும் ட்ரம்பின் செயற்கை நுண்ணறிவு என்பதனை “சூப்பர் இன்டலிஜென்ட்” எனப்பெயர் மாற்றியதை ஏற்று தனது “ஸ்பேஸ் எக்ஸ் ஏஐ “ என்ற நிறுவனப் பெயரை “ஸ்பேஸ் எக்ஸ் எஸ்ஐ” என மாற்றியதும் மீளவும் பில்லியனர்களின் கூட்டாண்மையில் அமெரிக்க தீர்மானமெடுக்கும் தன்மை தொடரப்போகிறது என்பதனை உறுதி செய்துள்ளது.  மிகுந்த பண பலமும் வான்வெளிக் கட்டுப்பாட்டுப் பலமும் அமெரிக்க அரசத்தலைவரை சமகால சர்வ வல்லமை படைத்தவராக மாற வைத்துள்ளது. இதனை அவர் வெனிசுலாவில் மேற்கொண்ட அப்பட்டமான ஆக்கிரமிப்பும் கியூபாவைப் பலவழிகளிலும் முடக்குவதும் கிரீன்லாந்தில் தன்னை விடுத்துப் பாதுகாப்பில் கிரின்லாந்தும் அதனை உள்ளடக்கிய டென்மார்க்கும் எதனையும் செய்ய இயலாத நிலையை, 1987ஆம் ஆண்டின் இந்திய – சிறிலங்கா உடன்படிக்கை போன்ற அமெரிக்க- டென்மார்க் – கிரீன்லாந்து ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தியுள்ளதும், யப்பானின் யென்னை டொலருடன் இணைத்து யப்பானின் நாணயத்தைப் பேணுதல் என்ற பொறிமுறையூடாக ஆசியப் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமையும், ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை முற்றாக விலக்கி மத்திய கிழக்கில் நவம்பர் 3க்கு முன்னரோ பின்னரோ தான் நினைத்தவாறு எடுக்க இருக்கும் வான்வெளி, கடல்வழி நடவடிக்கைகளில் தனது படையினருக்கு இழப்புக்கள் வராதவாறு மிக நுட்பமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளமையும், பிரித்தானியாவில் நிலைப்படுத்தியிருந்த அமெரிக்க நவீன குண்டுவீச்சு விமானங்களை மீளவும் அமெரிக்காவுக்கே அழைத்துள்ளமையும், அமெரிக்காவின் நவீன வசதிகள் கொண்ட ஆபிரகாம் லிங்கன் கப்பலை மத்திய கிழக்கில் இருந்து மீளப்பெற்று அதற்குப் பதிலாக இன்னும் பலம் வாய்ந்த கடற்படைக் கப்பலை முன்னரை விட அதிக மனிதவலுவுடன் மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளதும் உலகில் தனது அமெரிக்கா தாக்குதல் திறனை எல்லாவழிகளிலும் மேலும் வலுப்படுத்தி வருவதை உறுதி செய்கிறது.
இக்காலகட்டத்தில் எல்லாத் தீவுகளும் மூலோபாய தந்திர அரசியலுக்கும் போரியலுக்கும் முக்கியத்துவமானவை என்கிற ட்ரம்பின் ஐக்கிய நாடுகள் சபை பகிரங்க அறிவிப்பின் வட்டத்துள் இலங்கையும் இந்து மாக்கடல் தீவு என்ற வகையில் அடங்கலாம் என்பதை ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.  இந்நிலையில் இலங்கைத் தீவில் அத்தீவு சிங்கள மக்களின் இறைமைக்கு மட்டுமே உரியதென கடந்த 78 ஆண்டுகளாக பிரித்தானிய காலனித்துவ அரசால் ஈழத்தமிழரின் ஈழத்தமிழர்களின் உள்ளகத் தன்னாட்சி உரிமையின் சுதந்திரமான  செயற்பாடற்ற நிலையில் உருவாக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறை செயல்பட்டுக் கொண்டிருப்பதால் ஈழத்தமிழர்களால் உலகின் வேகமான அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது மக்கள் இறைமையைப் பாதுகாக்கக் கூடிய வகையில் மற்றைய அரசுகளுடன் எந்த நேரடித் தொடர்பாடல்களையும் மேற்கொள்ள இயலாது  என்பது வெளிப்படையான ஒன்று.
அதே வேளை ட்ரம்பின் அமெரிக்க அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான அண்மைக்கால ஒப்பந்தங்களோ அல்லது இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான அண்மைக்கால ஒப்பந்தங்களோ இரகசியக் காப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால் ஈழத்தமிழர்களால் தங்கள் தாயகப் பகுதியின் பாதுகாப்புடன் கூடிய அமைதி, வளர்ச்சி எவ்வாறு இன்றைய அனைத்துலக மக்கள் இறைமையை வல்லாண்மை மூலம் கட்டுப்படுத்தும் முயற்சிகளிடையே அமையுமென எதிர்வு கூறவும் இயலாத நிலை தொடர்கிறது.
ஆயினும் கடந்த வாரத்தில் வடக்கின் கடல்வளத்தின் மூலம் பல பில்லியன் வருமானம் பெறுவதற்கான சிறிலங்காவின் பொருளாதாரத் திட்டத்தினை வேகப்படுத்தும் நோக்கில் காங்கேசன்துறையிலும் பரந்தனிலும் கடலட்டை கடற்பாசி ஏற்றுமதிக்கான பொருளாதார மையங்களை 2027 ஜனவரி முதல் செயற்படுத்த நிலங்களை இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. மன்னாரில், திருகோணமலையில் கனிம வள அகழ்வுகளை வேகப்படுத்தும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. இவற்றின் நேரடியான தேவைகளும் விபரிப்புகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பதாக இருந்தாலும் இவற்றில் எந்த நாடுகள் பின்னணி வகுத்து உலகப் பாதுகாப்பு உலகச் சந்தை சார்ந்த விடயங்களுள் இவற்றை தொடர்புபடுத்தவுள்ளன என்பது கேள்விக்குரிய விடயமாக உள்ளது.
இத்தகைய சூழலில் மக்களே தங்கள் மண் மீதான தங்களின் இறைமையை தங்களிடை உள்ள புத்திஜீவிகள் முதலீட்டாளர்கள் உழைப்பாளர் சக்தி என்பவற்றின் ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் அனைத்துலக மயப்படுத்தித் தங்கள் மண்ணை, தங்கள் இருப்பை, தங்கள் தன்னாட்சியை பாதுகாக்க வேண்டும். இதற்கு ஈழத்தமிழர்கள் குறிப்பாக அனைத்துலகிலும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் உலகில் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நாளாந்த அரசியல் பொருளாதார மாற்றங்களை அறிவுசார் அணுகுமுறையில் ஆராய்ந்து அதற்கேற்ப சமகாலத்தை எதிர்கொள்ள வல்ல எதிர்வினைகளை ஆற்றவல்ல அத்துறைகளில் மேற்படிப்புகளை மேற்கொண்ட மேற்கொள்கிற துறைசார் கல்வியும் அனுபவமும் உள்ளவர்களை  இணைத்த ஒரு அரசியல் பொருளாதார சிந்தனை மையத்தினரை (Think Tank)  தாங்கள் வாழும் நாடுகளில் அமைக்க வேண்டும் என்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது.  அதனைத் தாயகத்தில் உள்ள அறிவுசார் சமூகத்துடன் இணைப்பதற்கு அங்கும் அத்தகைய கட்டமைப்பு உள்ள அரசியல் பொருளாதாரச் சிந்தனை மையத்தை அமைக்க வேண்டும். கடந்த வியாழன் காலமாகி எம்முடன் வாழும் அரசியல் பேராசிரியரும் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான ஜோதிலிங்கம் அவர்களின் நினைவாகக் கூடத் தொடங்கலாம் என்பது இலக்கின் கருத்து. இது அவருடைய மக்கள் பணிக்கான நிரந்தரமான நினைவேந்தலாக அமையும் என்பது இலக்கின் எண்ணம். தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றி முதலமைச்சர் யோசப் விஐய் அவர்களால் நிலையான பலமான மாநில ஆட்சியை ஏற்படுத்த இயலும் என்பதனை நிரூபித்துள்ள நிலையில் தமிழக, ஈழத் தமிழர்களிடையிலான பொருளாதார முயற்சிகளை வளர்த்தெடுப்பதற்கான காலம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த அரசியல் பொருளாதார சிந்தனை மையத்தின் தேவை மிக முக்கியமானதாகின்றது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதே வேளை தமிழ் வம்சாவளிப் பெண்ணான முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத் தலைவி நவநீதம்பிள்ளை அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமையை வரவேற்று வாழ்த்து தெரிவிக்கும் இலக்கு அவர் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு பொறுப்பாக இருந்த காலத்து ஈழத் தமிழர்களுக்கு சிறிலங்கா நடத்திய இனஅழிப்பு குறித்த அவரின் பார்வையை இனியாவது அவர் ஒரு நூலாக வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையை அனைத்துலக ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் அவரிடம் எழுப்ப வேண்டும் என்பதனையும் இலக்கு குறிப்பிட விரும்புகிறது.
ஆசிரியர்

Tamil News