தமிழர் தாயகத்தில் சுற்றுலாத்துறை ஊடாக ஈட்டப்படும் வருமானத்தில் ஒரு பகுதி அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர விருந்தகங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகைத்தரும் போது அவர்கள் தமிழ் மொழியில் ‘வணக்கம்’ என்று குறிப்பிட்டு வரவேற்கப்படுவார்கள்.
இது ஒரு வழக்கமாகவே ஆரம்பத்தில் இருந்து காணப்பட்டது.
ஆனால் அண்மைகாலமாக அந்த கலாசாரம் மாற்றப்பட்டு ‘ஆயுபோவன்’ என்று சிங்கள மொழியில் குறிப்பிடப்படுகிறது என்றும் மாகாண அடிப்படையிலான கலாசாரங்களை பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுற்றுலாத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், “ஆயுபோவன் என்று குறிப்பிடுவதை போன்று வணக்கம் என்று குறிப்பிடுவதும் நல்லதே, அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
“குறித்த இடங்களில் வணக்கம் என்று குறிப்பிட அறிவுறுத்துவதாகவும் காலை வணக்கம், மாலை வணக்கம் என்று குறிப்பிடுவோம். அது நல்லதே” என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இந்த விடயத்தினை முன்வைத்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சேவை அச்சுறுத்தலான தன்மையில் காணப்படுகிறது என்றும் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலா அபிவிருத்தியின் ஊடாக கிடைக்கப்பெறும் வருமானத்தில் ஒரு சதவீதம் பிரதேச செயலக பிரிவுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பிரதேச சபை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறான தன்மை கிடையாது.
விருந்தகங்களின் வருமானத்தின் ஒருபகுதியை பிரதேச சபைகளுக்கு செலுத்துவில்லை.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தினார்.



