நாட்டில் இனப்பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்குவதற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் பயன்படுத்தப்பட்டதாக ஜன பலய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர இந்த விடயத்தை தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் ராஜபக்ச ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக நாட்டில் அச்சமும் பதற்றமும் தொடர்ச்சியாக நிலவக்கூடிய சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
யுத்தம் நிறைவடைந்திருந்த போதிலும், யுத்த சூழலை ஒத்த ஒரு பதற்றமான நிலைமையை நாட்டில் பேணுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2010ஆம் ஆண்டுக்கு பின்னர் குறிப்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சில குழுவினர் பயன்படுத்தப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்களும் இனவாத கருத்துகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதன் மூலம் சமூகங்களுக்கிடையில் சந்தேகத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையிலான பதற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
திகன மற்றும் பேருவளை போன்ற பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களையும் இதன் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டில் அச்சமான சூழலை உருவாக்கி, அதனை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்றன என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிலர் தாங்கள் காவி உடை அணிந்திருப்பதன் காரணமாக சட்டத்துக்கு மேலானவர்கள் என்ற மனநிலையுடன் செயற்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் காணப்பட்ட தயக்கமும் இத்தகைய செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தது.
ராஜபக்ச முகாம் என்பது ராஜபக்ச குடும்பத்தை மாத்திரம் உள்ளடக்கியதல்ல.
அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்ட அரசியல் மற்றும் கருத்தியல் வலையமைப்பும் அந்த முகாமின் ஒரு பகுதியாகும்.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் அவரை முன்னிலைப்படுத்துவதற்கும் ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் பயன்படுத்தப்பட்டனர்.
இனங்களுக்கு இடையிலான பதற்றத்தை உருவாக்கி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பேணுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டது.
தற்போது ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்ட விவகாரத்தையும் மீண்டும் இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கான கருவியாக பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர தெரிவித்தார்.
இதன் பின்னணியில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் குழுவினரும் இனவாத அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
எனவே, மக்கள் மீண்டும் இவ்வாறான இனவாத அரசியல் அணிதிரட்டல்களுக்கு இடமளிக்கக் கூடாது.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சமூகங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர தெரிவித்தார்.


