கருங்கடலில் கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்: மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கருங்கடலில்  ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதுடன், அதில் இருந்த மாலுமிகளின் நிலைமை குறித்து தகவல் கிடைக்கவில்லை என பல்கேரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்கேரியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் தானியங்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு வர்த்தகக் கப்பலும் தாக்குதலுக்கு உள்ளானதாக பல்கேரிய பிரதமர் ரூமென் ரதேவ் தெரிவித்துள்ளார். அந்தக் கப்பலில் இருந்த 18 மாலுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல்களை நடத்தியது யார் என்பது குறித்து ரதேவ் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், உக்ரைனுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக ரஷ்யா கருங்கடலில், குறிப்பாக அதன் கிழக்குப் பகுதியில், தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பல்கேரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பியாலா கடலோர நகரத்திலிருந்து சுமார் 70 மைல்கள் (112 கிலோமீற்றர்) தொலைவில், அதிகாலை 3 மணியளவில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக ரதேவ் தெரிவித்துள்ளார். வான் மற்றும் கடல் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மூழ்கிய கப்பல் ‘ஆல்ஃபா வதான்’ (Alfa Watan) என அடையாளம் காணப்பட்டுள்ளது. துருக்கிக்குச் சொந்தமான இந்தப் பொதுச் சரக்குக் கப்பல் டோகோ நாட்டின் கொடியை ஏந்திச் சென்றதாகவும், ருமேனியாவின் சுலினா துறைமுகத்தை நோக்கிப் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர் என்பதும், அது என்ன சரக்கை ஏற்றிச் சென்றது என்பதும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பல்கேரியக் கப்பல் அங்கு சென்றபோது, கவிழ்ந்த படகு, உயிர்காக்கும் மிதவைகள் மற்றும் உயிர்காக்கும் அங்கிகளை மட்டுமே கண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன மாலுமிகளைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு கப்பலான ‘ஏபிள்’ (Able) இன் 18 மாலுமிகளையும் பல்கேரிய மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அவர்களில் இருவர் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்திருந்தனர்.

மீட்கப்பட்டவர்களில் 11 பேர் துருக்கியர்களும், 7 பேர் இந்தியர்களும் ஆவர். பலாவு நாட்டின் கொடியை ஏந்திச் சென்ற ‘ஏபிள்’ கப்பல் தானியங்களை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலின் கடைசியாகப் பதிவான இருப்பிடம், ‘ஆல்ஃபா வதான்’ கப்பலிலிருந்து சுமார் 5 கடல் மைல்கள் (9 கிலோமீற்றர்) தொலைவில் இருந்தது.

இந்தத் தாக்குதல்களை “கடல்சார் சட்டத்தின் அப்பட்டமான மீறல்” என பல்கேரிய பிரதமர் ரதேவ் கண்டித்துள்ளார்.

“பல்கேரியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தாக்குதல்களுக்கு ரஷ்யாவைக் குற்றம் சாட்டாத ரதேவ், உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்தால் அதன் புவியியல் பரவல் அதிகரித்து, உலகளாவிய மோதல் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கருங்கடலில் வர்த்தகக் கப்பல்களும் அப்பாவி மாலுமிகளும் இலக்கு வைக்கப்படுவது “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.

“கருங்கடலில் நிலவும் நிலைமை அதிகளவில் கவலையளிப்பதாக உள்ளது” என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை உக்ரைனின் ஒடெசா அருகே இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதலில் கப்பல் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் மார்ஷல் தீவுகளின் கொடியை ஏந்திச் சென்றதாக உக்ரைனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யா, 2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை ஆரம்பித்த நிலையில், கருங்கடல் பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.