கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கடற்றொழிலாளர்கள் தீர்மானம்!

கடற்றொழிலாளர்களின் வாழ்வியலைச் சிதைக்கும் வகையில் செயற்படும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகக் கடற்றொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

வழக்குச் செலவுகளுக்காகப் பொதுமக்களிடமிருந்து எதிர்வரும் நாட்களில் உண்டியல் மூலம் ஒரு ரூபாய் வீதம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடற்றொழில் சார்ந்தோ, வாழ்வாதாரம் சார்ந்தோ அல்லது இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை சார்ந்தோ எவ்வித முன்அனுபவமும் இல்லாத அமைச்சர் சந்திரசேகரனை உடனடியாக அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, துறை சார்ந்த அனுபவமுள்ள ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பகுதி கடலினைக் கடற்றொழில் அமைச்சரிடமிருந்து காப்பாற்ற வலியுறுத்தும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பாரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அண்மையில் கைது செய்யப்பட்ட 9 இந்தியக் கடற்றொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கடற்றொழில் அமைப்புகள் கோருவது முற்றிலும் தவறானது என்றும் குறிப்பிட்டுள்ள அவர் சட்ட ரீதியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டே அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த நாட்களில் நெடுந்தீவுக் கடற்றொழிலாளர்களின் 80 வலைகள் இந்தியக் கடற்றொழிலாளர்களால் சேதப்படுத்தப்பட்டபோது இந்திய அமைப்புகள் அதுகுறித்துப் பேசவில்லை என்றும், முறையான சட்ட நடவடிக்கைகளின் மூலமே அவர்களின் விடுதலை தீர்மானிக்கப்படும் என்றும் கடற்றொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா சுட்டிக்காட்டினார்.