விடுதலைப் புலிகள் அமைப்பை தாமே பிளவு படுத்தியதாக ரணில் தெரிவிப்பு

“விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது தாமே” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றிய போது விடுதலைப் புலிகள் தொடர்பில் பகிரங்கமாகக் கருத்துரைத்தமை குறித்து, அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவினால் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் முந்தைய அரசியல் வரலாற்றுப் பின்னணியை சுட்டிக்காட்டி விளக்கமளித்தார்.

இது குறித்து ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்துரைக்கையில், “இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. முதன்முதலில் பயங்கரவாத அமைப்பில் இருந்த ஒருவரைத் தம் பக்கம் ஈர்த்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆவார்.

அவர்தான் டக்ளஸ் தேவானந்தவை முதன் முதலில் இணைத்துக் கொண்டார். அதற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தம் பக்கம் இணைத்தார். அதே வழியையே மகிந்த ராஜபக்சவும் தொடர்ந்து பின்பற்றினார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன உட்பட்ட அன்றைய அரசாங்கத்தை இலங்கை – இந்திய ஒப்பந்தம் முற்றாக முடக்கிப்போட்டது. நான் அந்த நிலையை மாற்றி, முடக்கத்தை உடைத்தெறிந்தேன்” என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

“உண்மையைச் சொன்னால், ஜே.ஆர். இந்திய ஒப்பந்தத்திற்குள் முடக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான் தான்.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்து, ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வந்தேன்.

ஆனால், கருணாவை தேசிய அரசியலில் நேரடியாக இணைத்துக் கொண்டது மகிந்த ராஜபக்ச தான்.

எவ்வாறாயினும் பிரேமதாச பயங்கரவாத அமைப்பில் இருந்தவரைத் தம்மிடம் எடுத்தது போல், நான் தான் விடுதலைப் புலிகள் அமைப்பை இரண்டாகப் பிளவுபடுத்தினேன்” என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் சந்திரிக்கா, கருணாவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதுடன், இவர்கள் அனைவரையும் பயன்படுத்தி இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பை மகிந்த ராஜபக்ச அழித்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொடூர யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், ஜே.வி.பி அமைப்பானது விடுதலைப் புலிகளுக்கு நிகராக மகா சங்கத்தினரையும் இராணுவத்தினரையும் கொன்றுகுவித்தது.

அந்தக் காலத்தில் தான் ‘ஜே.ஆரைக் கொல்லுங்கள்’ என்ற பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.