பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன், ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன மற்றும் அப்போதைய பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக்க டி சில்வா ஆகிய மூவரே இந்த மனித உரிமை மீறலுக்குப் பொறுப்பானவர்கள் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தன.
எனினும், இந்த முறைப்பாடு அரசியல் நோக்கத்துடனும் தீய எண்ணத்துடனும் செய்யப்பட்டது என்றும், இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகள் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருந்தன என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொய் முறைப்பாடு அளித்த ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன மனுதாரர்கள் இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயையும், விசாரணையை மேற்கொண்ட அப்போதைய பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக்க டி சில்வா தலா 10 ஆயிரம் ரூபாயையும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புளி ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ் தங்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



