‘சிறுவர் தின தேசிய வாரம் – 2026’ பிரகடனம்

சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நல்லாரோக்கியம் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை ‘சிறுவர் தின தேசிய வாரம் – 2026’ எனப் பிரகடனப்படுத்தி விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சமகாலத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பாரம்பரிய சிறுவர் பாதுகாப்புப் பிரச்சினைகளையும் தாண்டி, இணையவழி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த அபாயங்கள் வரை விரிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சிறுவர்கள் மட்டுமன்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சிறுவர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்கும் அனைத்துத் தரப்பினரிடையேயும் சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
சிறுவர் உரிமைகள் தொடர்பாகப் பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல், பிள்ளைகள் தொடர்பாகச் சமூகக் கூருணர்வை விருத்தி செய்தல் மற்றும் சிறுவர் பாதுகாப்புக்கான சமுதாயப் பங்கேற்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தேசிய சிறுவர் தினக் கொண்டாட்டங்களுக்கு இணையான இந்த தேசிய வாரம் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விசேட வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.