அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகக் கூறி குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு, மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, “ஒன்றிணைந்த எதிர்க்கட்சி” என தங்களை அடையாளப்படுத்தும் சிவில் சமூக அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சியினரும் கவலை வெளியிட்டிருந்தனர்.
குறித்த பேரணியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தன்னை ஒரு “புலி” எனக் குறிப்பிட்டதுடன், “நரியை” ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நிதி வழங்கியதாகவும் அர்ச்சுனா குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான கருத்துக்களுக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலருக்கே இக்கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த போதிலும், மேடையில் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசப்பட்ட போது அங்கிருந்த சில ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேர்தல் சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்திக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று (15) நிராகரித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, அர்ச்சுனா வெளியிட்ட பொய் அறிக்கைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா உரையாற்றினார் என்று கூறப்படும் சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இது தொடர்பாக காவல்துறையினரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



