மயிலத்தமடு – மாதவனை பகுதியில் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரி கால்நடை பண்ணையாளர்கள் தற்போது 1,500 நாட்களுக்கும் மேலாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டும், மீண்டும் மீண்டும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டும் இந்தப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாணக்கியன் மேலும் கூறுகையில்,
பாரம்பரியமாக கால்நடைகளின் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த மேய்ச்சல் நிலங்கள் பெருமளவில் சேதமடைந்தும் ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்ற நிலையில், பரந்த நிலப்பரப்புகளில் தற்போது கால்நடைகளுக்குத் தேவையான புற்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நிலவும் மழையின்மை மற்றும் வறட்சியான காலநிலை இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்குப் போதுமான மேய்ச்சல் நிலங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரமும், அவர்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் கால்நடைகளும் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.
பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரி கால்நடை பண்ணையாளர்கள் தற்போது 1,500 நாட்களுக்கும் மேலாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டும், மீண்டும் மீண்டும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டும் இந்தப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை.
இந்த நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுவது 1972ஆம் ஆண்டில் ஆரம்பமானதல்ல. பல தலைமுறைகளாக, சமூகத்தின் வரலாற்றுப் புரிதலின்படி பல நூற்றாண்டுகளாகவே விவசாயிகள் இந்த நிலங்களைப் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக, 1972ஆம் ஆண்டு முதல் இந்நிலங்கள் கால்நடை மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணப் பதிவுகளும் காணப்படுகின்றன.
நாடாளுமன்றப் பதிவுகளிலும், 1972ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்காக மயிலத்தமடு கால்நடை மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, 1972ஆம் ஆண்டு என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த பாரம்பரிய பயன்பாட்டுக்கான உத்தியோகபூர்வ ஆவணம், விவசாயிகள் குறித்த நிலங்களை பயன்படுத்தத் தொடங்கிய ஆண்டைக் குறிக்கவில்லை.
இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தின் அளவும் சில உத்தியோகபூர்வ பதிவுகளில் காணப்படும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
Centre for Policy Alternatives (CPA) நிறுவனம் 2023ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், மாதவனை–மயிலத்தமடு பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத வகையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 1,072 குடும்பங்கள் இருப்பதாகப் பதிவு செய்துள்ளது.
எனினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட கணிசமாக, அதிகமாக இருப்பதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல உறவினர்களுக்குச் சொந்தமான கால்நடைகளை ஒரு குடும்ப உறுப்பினர் பராமரிப்பது வழக்கமாக உள்ளது.
மேலும், தங்களது கால்நடைகளைப் பதிவு செய்தால் சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற நலன்புரித் திட்டங்களுக்கான தகுதி பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக சில குடும்பங்கள் கால்நடைகளைப் பதிவு செய்வதற்கு தயக்கம் காட்டுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, கால்நடைப் பதிவுகளின் எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, இந்த மேய்ச்சல் நிலங்களைச் சார்ந்து வாழும் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைத் தீர்மானிப்பது சரியானதாக இருக்காது.
பாரம்பரியமாக கால்நடை மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது.
வெளிப்பகுதிகளைச் சேர்ந்த சிலர் இந்நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதன் காரணமாக மேய்ச்சல் நிலங்கள் இழக்கப்படுவதாகவும் விவசாயிகள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
கால்நடைகள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் உள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்கு பின்னால் உள்ள சக்திகள் தொடர்பாகவும் கால்நடைப் பண்ணையாளர்கள் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
குறிப்பிட்ட சில பௌத்த பிக்குகள் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் இந்த நிலங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஆதரவளித்ததாக அல்லது அதனைத் தூண்டியதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சர்ச்சைக்குரிய நிலங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள சில சிங்கள விவசாயிகளுக்கு ஒரு அரசியல் சக்தியினால் ஆதரவு வழங்கப்படுவதாகவும், அவர்கள் அங்கு தொடர்ந்து தங்கி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்காக மாதாந்தம் பணம் அல்லது வேறு வகையான நிதி ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நான் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களிடமும் பல முறை எழுப்பியுள்ளேன்.
2024ஆம் ஆண்டு, மயிலத்தமடு, கேவிலியமடு மற்றும் உன்னிச்சை உள்ளிட்ட பகுதிகள் ஏன் கால்நடை மேய்ச்சல் நிலங்களாக முறையாகப் பாதுகாக்கப்பட்டு வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படவில்லை என நான் குறிப்பாகக் கேள்வி எழுப்பியிருந்தேன்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்தப் பிரச்சினைக்கு இறுதியாகத் தீர்வு கிடைக்கும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்திருந்தார்.
எனினும், அந்த உறுதிமொழி வழங்கப்பட்ட போதிலும், கள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
ஜனாதிபதி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ள நிலையில், ஒரு அமைச்சரவை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இந்த மேய்ச்சல் நிலங்கள் உண்மையில் இருந்தனவா என்றே கேள்வி எழுப்பியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
நிறைவேற்று அதிகாரத்தின் உயர்ந்த மட்டத்தில் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொறுப்பான அமைச்சர் இந்த நிலங்களின் இருப்பு அல்லது நிலை குறித்தே கேள்வி எழுப்புகின்ற நிலையில், இனி தங்களுக்கு எஞ்சியிருக்கும் வழி என்ன? என விவசாயிகள் கேட்கும் உரிமை கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக நடைபெறும் இந்த நில ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்ற நடவடிக்கைகளின் மக்கள்தொகை சார்ந்த விளைவுகள் தொடர்பிலும் பரந்த கவலை எழுந்துள்ளது.
தமிழ் கால்நடைப் பண்ணையாளர்கள் பல தலைமுறைகளாக தமது சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருந்த நிலங்களுக்கான அணுகலை படிப்படியாக இழந்து வரும் நிலையில், வெளிப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்த நிலங்களில் குடியேற்றப்படுகின்றனர் என்றால், வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த வடக்கு –கிழக்குப் பகுதிகளின் மக்கள்தொகை அமைப்பில் இது பரந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பதையும் அரசாங்கம் ஆராய வேண்டும்.
ஆட்சி, சமத்துவம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் மாறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழும் இத்தகைய கவலைகள் தொடர்வது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி கால்நடைப் பண்ணையாளர்கள் தற்போது 1,500 நாட்களுக்கும் மேலாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அரசாங்கங்களை அணுகியுள்ளனர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர், நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்பியுள்ளனர், மேலும் அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்தும் உறுதிமொழிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலைமையை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலும், நிறைவேற்று அதிகாரத்தினால் பயனுள்ள தீர்வு வழங்கப்படாத நிலையில், இறுதியில் விவசாயிகள் நீதித்துறையின் பாதுகாப்பை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, நாம் மீண்டும் அதே நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.
எனவே, பாதிக்கப்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களின் சார்பில் சட்ட நடவடிக்கைகளை மீண்டும் எடுப்பது குறித்து நான் பரிசீலித்து வருகிறேன். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்படும் சட்ட நடவடிக்கையின் மூலம், மேய்ச்சல் நிலங்களின் தற்போதைய நிலைமை, அவற்றின் வரலாற்று மற்றும் உத்தியோகபூர்வ நிலை, தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் பயிர்ச்செய்கை, கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் அவர்களது கால்நடைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம், முன்னைய அரசாங்கத் தீர்மானங்கள் மற்றும் உறுதிமொழிகள், அத்துடன் பயனுள்ளதும் நிரந்தரமானதுமான தீர்வினை வழங்குவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோல்வியடைந்தமை ஆகிய விடயங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.
இது இனியும் மற்றுமொரு கூட்டத்தின் மூலமோ அல்லது மற்றுமொரு உறுதிமொழியின் மூலமோ தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை அல்ல.
விவசாயிகள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர். அவர்களது கால்நடைகள் உறுதிமொழிகளை உண்டு உயிர்வாழ முடியாது.
நிறைவேற்று அதிகாரத்தினால் இந்த மேய்ச்சல் நிலங்களையும் இந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியாத நிலையில், மீண்டும் நீதித்துறையின் பாதுகாப்பை நாடுவதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.



