கோத்தபயா கொலை வழக்கு சந்தேக நபர் விடுதலை

கோத்தபயா ராஜபக்ஸவை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, 13 வருடங்களிற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் நேற்று(18) விடுதலை செய்யப்பட்டார்.

2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில், நடைபெற்ற கோத்தபயா ராஜபக்ஸ மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக 5பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் கோவில் அர்ச்சகர் உட்பட மூவர் விடுதலை செய்யப்பட்டனர்.

நான்காம் எதிரியான புங்குடுதீவைச் சேர்ந்த சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவர் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குற்றவாளியை, 14 ஆண்டுகளாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாதிருந்தும் அவரை தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என அவரின் சட்டத்தரணி கே.வி.தவராசா கடந்த விவாதத்தின் போது முன்வைத்திருந்தார்.

அதன் அடிப்படையில் அவரின் குற்றங்களை நிரூபிக்க நேற்றுவரை கொழும்பு சிறப்பு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியிருந்தது.

நேற்றைய விசாரணையின் போது சட்டமா அதிபர் சார்பான சட்டத்தரணி வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான சான்றுகள் பெற மேலும் கால அவகாசம் கோரியிருந்தார்.

இதேவேளை எதிரி சார்பாக வாதாடிய கே.வி.தவராசா, வழக்கை நடத்துவதற்கான சான்றிதழ்களை நீதிமன்றில் முன்வைக்கா விட்டால் எதிரியை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க நீதிமன்றிற்கு அதிகாரம் உள்ளது என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட கொழும்பு சிறப்பு நீதிமன்றம் சந்திரபோஸ் செல்வச்சந்திரனை விடுதலை செய்தது.