ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடமேறி இரு ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் ‘பிரான்சிஸ்கன் இன்டர்நெஷனல்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவில் கடந்த திங்கட்கிழமை (7) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் செவ்வாய்க்கிழமை (8) அமர்வின்போது ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் வாசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற பொது விவாதத்தின்போது ‘பிரான்சிஸ்கன் இன்டர்நெஷனல்’ அமைப்பின் சார்பில் உரையாற்றிய மேரி சித்திஜா ஜயமான்ன கூறியதாவது:
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும்.
உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் இத்தாக்குதல் வெறுமனே சஹ்ரான் தலைமையிலான குழுவினரால் மாத்திரம் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், மாறாக அதற்கு அப்பால் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சதித்திட்டத்தின் தன்மை இதில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை தேடுவதால் ஆபத்துக்கு முகங்கொடுத்திருக்கும் பாதிக்கப்பட்டோர், சாட்சியாளர்கள், புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், கிறிஸ்தவ மதத்தலைவர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.



