மோதல்களின் முடிவானது சவால்களின் முடிவல்ல, மாறாக ஒன்றுபட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் தொடக்கத்தையே குறிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்நாட்டு அளவிலான செயல்முறைக்குத் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதிநிதி சுமித் தசநாயக்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையானது பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் வழிமுறைகளுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு உணர்வுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அதேவேளையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் நீடித்த முன்னேற்றமானது தேசிய அளவில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 60/1 குறித்து கருத்துரைத்த தசநாயக்க, வெளிப்புறச் சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் விதிகள் உட்பட, அத்தீர்மானத்தை இலங்கை ஆதரிக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.
அத்தகைய வெளிப்புறப் பொறிமுறைகள் பிளவுகளை உருவாக்குவதற்கும், ஏற்கனவே நடைபெற்று வரும் தேசிய செயல்முறைகளைச் சீர்குலைப்பதற்கும் வழிவகுக்கும் என்று அவர் வாதிட்டார்.
குற்றவியல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்க முன்னெடுப்புகள் மற்றும் நினைவுகூர்தல் முயற்சிகள் உள்ளிட்ட இலங்கையின் நேர்மறையான முன்னேற்றங்களை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அங்கீகரித்திருப்பதை வரவேற்பதாகவும் ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஒரு சுதந்திரமான அரச வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுகளை உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான குழு ஒன்று தொடர்ந்து பரிசீலித்து வருவதாகவும், அதேவேளையில், நிலம் விடுவிப்பு, மதிப்பீடு மற்றும் இழப்பீடு தொடர்பான பிரச்சினைகளை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவொன்று மறுஆய்வு செய்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதிநிதி சுமித் தசநாயக்க தெரிவித்துள்ளார்



