உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அரசாங்கம் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் வலியுறுத்தப்படுவது போன்று, தேசிய பொறிமுறையை இலங்கை நடைமுறைப்படுத்திக் கொண்டே இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன் காரணமாகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன் காணாமலாக்கப்பட்டவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்றும் இதுவே தேசிய பொறிமுறையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘‘இலங்கை தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் ஜெனீவா பேரவைக்கு முன்வைத்துள்ளார். இதற்கு முன்னர் முன்கூட்டிய அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளினால் பொருளாதார ரீதியாக மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளானார்கள். அதனூடாக மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பது உண்மை” என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

“அதேபோன்று, எமது நாடு அண்மையில் சந்தித்த டிட்வா புயலின் பாதிப்புக்கள், மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமை, அதனால் ஏற்பட்டுள்ள வெளித்தாக்கங்களினால் எமது நாட்டு பொருளாதாரத்தில் ஒருசில தாக்கங்கள் ஏற்பட்டன.

அந்த நெருக்கடியினால் எமது மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெளிவாக அறிவித்திருக்கிறார்”.

“அவரது முன்கூட்டிய அறிக்கையில், கடந்த காலங்களில் இதுதொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறிப்பாக ஊழல், மோசடியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்மறையான பல்வேறு விடயங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது”.

“அதேபோல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை நீக்குவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் அந்த சட்டங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஒட்டுமொத்த அறிக்கையையும் எடுத்துக்கொண்டால் கடந்த இரண்டு ஆண்டுகளில், எமது நாடு இனவாத மோதல்கள் இல்லாமல், சமயம் சார்ந்த மோதல்கள் இல்லாமல் நாட்டில் அமைதியை நிலைக்கச் செய்தது தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரவேற்புக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது”.

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனையின் முக்கிய கருத்துடன் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்களின் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளோம்.

உள்நாட்டு பொறிமுறையை நாங்கள் நடைமுறைப்படுத்திக்கொண்டே இருக்கின்றோம்” என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம், நிவாரணம் வழங்குவதற்கான அலுவலகம் என்பவற்றை வலுப்படுத்தியுள்ளோம். காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு 375 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இதுபோன்ற பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.