இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக் கடியைத் தொடர்ந்து, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நேரடியாக நிதி உதவியை வழங்கும் நோக்குடன் 2023ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி “அஸ்வெசும” நலன்புரித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சமூகப் பதிவேடு மற்றும் குடும்பங்களின் பொரு ளாதார நிலைகளை அடிப்படையாகக் கொண்டு, தகுதியான பயனாளிகளை வெளிப்படையாகத் தெரிவு செய்வதை இத்திட்டம் முதன்மை இலக்காகக் கொண்டிருந்தது. இருப் பினும், மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தில் இந்த திட்டம் எந்தளவுக்கு அத்தியாவசிய பாதுகாப்புக் விடய மாக பார்க்கப்படுகிறதோ, அந்தளவுக்கு அதன் நிர்வாக நடைமுறைகளில் ஏற்படும் முறைகேடுகள் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைப்பதாக அமைந்துள்ளன. மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
நாளாந்த அல்லது மாதாந்த உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் இந்த குடும்பங்களில், தேயிலைத் தோட் டத்தில் வேலை நாட்களின் குறைவு அல்லது தொழி லிழப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்தக் குடும்பமும் உடனடி யாகப் பட்டினியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறது. மாதாந் தம் கிடைக்கும் அஸ்வெசும நிதி ஒரு குடும்பத் தின் முழுமையான வருமானப் பற்றாக்குறையை ஈடுசெய்யா விட்டாலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பிள்ளை களின் பாடசாலைச் செலவுகள், போக்குவரத்து மற்றும் மருத்துவச் தேவைகளுக்குப் பெரியதொரு ஆதரவாக அமைகிறது.
குறிப்பாக அஸ்வெசும உதவிகளை பெறும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு பாடசாலை உப கரணங்களை கொள்வனவு செய்வதற்கான உதவியும் அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்படுகிறது. அதேநேரம் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வேலை செய்யக்கூடிய உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்களுக்கு இச்சமூகப் பாதுகாப்பு இன்றியமையாதது. குறித்த திட்டத்தின் கீழ் “வறியோர்” பிரிவுக்கு மாதம் ரூ.10,000 மற்றும் “மிகவும் வறியோர்” பிரிவுக்கு மாதம் ரூ.17,500 வழங்கப்படுவதுடன்; முதியோர் கொடுப்பனவு ரூ.5,000 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித்தொகை ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளாக நாட்டின் பொருளாதாரத்திற் குத் தேயிலை மூலம் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் பெருந்தோட்ட மக்களுக்கு, இத்திட்டம் வெறும் தயவோ சலுகையோ அல்ல. அது அவர்களின் அடிப்படைச் சமூகப் பாதுகாப்பு உரிமையாகும். இவ்வாறான சூழலில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பணியாற்றும் சில அரச பணியாளர்களின் முறைகேடுகள் காரணமாக அதன் பயன்கள் முழுமையாக மக்களை சென்றடையாத நிலை காணப்படுகிறது.
இந்தநிலையில் ஹட்டன் நோர்வூட் பகுதியில் அஸ்வெசும பயனாளிகளுக்கு சென்றடைய வேண் டிய சுமார் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதியை முறைகேடு செய்த சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டமை பேசுபொருளானது. நோர்வூட் சம்பவம் மட்டுமன்றி, அஸ் வெசும திட்டம் தொடங்கப்பட்ட காலம் முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலவிதமான முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் தொடர்பில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட புதிதிலேயே, சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மேன்முறையீடுகளும் ஆட்சேபனைகளும் நலன்புரி நன்மைகள் சபைக்குக் கிடைத்தன. வசதியான வீடுகள், நிரந்தர அதிக வருமானம் மற்றும் சொத்துக்கள் கொண்ட நபர்கள் பயனாளிகளாகப் சேர்க்கப்பட்டதாகவும், உண்மையான வறிய பெருந்தோட்டக் குடும்பங்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் நாடு முழுவதிலும் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் இந்த குற்றச்சாட்டு இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. பலர் குறித்த நலன்புரி திட்டத்திற்காக விண்ணப்பிக்கின்ற போதிலும் அதற்கான அனுமதி கிடைக்காத நிலை தொடர்கிறது. இதேவேளை, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான கணக்கெடுப்பு மற்றும் தரவு சேகரிப்பின் போது, கள நிலவரத்தை சரியாக ஆய்வு செய்யாமல் சுயமாகவே தகவல்களைப் பதிவேற்றியதாகவும், சில இடங்களில் பெயர்களைப் பட்டியலில் சேர்ப்பதற்குச் சில கீழ்மட்ட அதிகாரிகள் லஞ்சம் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த வரிசையில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ரூ.16.2 மில்லியன் நிதி முறைகேட்டைப் போலவே, பயனாளிகளுக்குத் தெரியாமல் அவர்களின் கணக்கு எண்களை மாற்றுதல் அல்லது அமைப்பின் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி வேறு கணக்குகளுக்கு நிதியைத் திருப்பிவிடும் தொழில்நுட்ப முறைகேடுகள் சில பிரதேச செயலகப் பிரிவுகளில் அவதானிக்கப்பட்டன. அத்துடன் தகுதியான பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு அட்டைகள் வழங்கப்பட்ட போதிலும், மாதக்கணக்கில் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படாமல் அரச அதிகாரிகளின் அலுவலகக் கோப்புகளில் கோரிக்கைகள் முடங்கிக்கிடப்பதாகப் பல பெருந்தோட்டப் பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
நோர்வூட் நிர்வாக முறைகேடு
நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் – நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய நிதியில் பெருமளவு முறைகேடு இடம் பெற்றுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் மலையக மக்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக உரித்தான அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட பயனாளிகள் நேரடியாக முன்வைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது.
ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவு நடத்திய முதற்கட்ட விசாரணைகளில், நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவுடன் தொடர்பு டைய இரண்டு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மேலும் மூன்று அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், முறைகேட்டின் மதிப்பு சுமார் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் வரை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
மாவட்ட செயலகம் மற்றும் நிதி அமைச்சுடன் இணைந்த தணிக்கை அதிகாரிகள் 2023 முதல் 2025 வரை யான காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுப்பனவுகள் குறித்து விரிவான கணக்காய்வை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கத்தின் கணக்கு வழக்குகளிலோ அல்லது ஊடக செய்திகளிலோ 1.62 கோடி ரூபாய் என்பது ஒரு நிதியியல் இழப்பாக மட்டுமே தோன்றக்கூடும். ஆனால், பெருந்தோட்டக் லயன் அறைகளில் வாழும் ஏழைக் குடும் பங்களின் பார்வையில் இதன் இழப்பு கொடுமையானது.
குறிப்பாக ஒரு குடும்பத்தின் முழு மாதத்திற்குமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுச் செலவு பறிபோயுள்ளது. பாடசாலைப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் போக்குவரத்துக்கான சிறு தொகையின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்ட முதியோர்களின் மாதாந்த செலவுகள் தொடர்கின்றன. அஸ்வெசும திட்டம் நிதியுதவியுடன் நின்றுவிடாமல், பயனாளிகளைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் முன்னோடித் திட்டங்களையும் உள்ளடக் கியுள்ளது.
ஆனால், கள மட்டத்தில் இடம்பெறும் இத்தகைய ஊழல்கள் திட்டத்தின் உயரிய நோக்கத்தையே கேள்விக் குறியாக்குகின்றன. பயனாளிகளின் பெயர்ப்பட்டியல்கள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் பிரதேச செயலக மட்டத்தில் வெளிப்படையாகக் காட்சிப் படுத்தப்பட்டுத் தணிக்கை செய்யப்பட வேண்டும். 1924 என்ற தொலைபேசி உதவி இலக்கம் செயல்பட்ட போதி லும், கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் மனிதத் தலையீடுகளைக் குறைக்கும் டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும். மோசடியால் பாதிக்கப்பட்ட உண்மையான பயனாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களுக்குச் சேர வேண்டிய நிலுவை நிதி முழுமையாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்.
அரச அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏழைகளின் பணத்தைக் கையாடல் செய்தவர்கள் மீது தயவுதாட்சணியமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நில உரிமை, முறையான வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான தொழில் வாய்ப்புகளே மலையக மக்களின் வறுமைக்கு நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். அதுவரை, அஸ்வெசும போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எந்தவித முறைகேடுமின்றி, உரிய நேரத்திற்கு, சரியான நபர்களை சென்றடைவதை உறுதி செய்வதும், அரச பொறிமுறையை வெளிப்படைத்தன்மையுடன் இயக்குவதும் அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும்.



