தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என 6 கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (3) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குறித்த பணியை அவசரமாகச் செய்ய முடியாது என்றும், பல்வேறு சமூகங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய சமூகப் பரிசீலனையாக அது குறித்துக் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இது 1948, 1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புகளைப் போன்று, ஒரு தரப்பினரால் மாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் அரசியலமைப்பாக இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதுடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டார்.
எனினும், இந்த சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தை விட, புதிய மக்கள் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான கருத்தாடலைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பல்வேறு சமூகப் பிரிவினரும் தமது தேவைகளுக்காக மாத்திரம் செயற்படுவதைத் தாண்டி, இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்படும் நாட்டை உருவாக்கும் அடித்தளம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலத்தில் நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களும் இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் முறையான ஆட்சி முறைமையே தனது எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் நிலவும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், ஆணைக்குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட அதற்கான பல சாதகமான நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், போரினால் வீடுகளை இழந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வாக, அந்த மக்களுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் 13 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2027 மற்றும் 2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள் குறித்தும் இங்கு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் பழைய கொள்கைகளின் அடிப்படையில் செயற்படுவதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெளிவுபடுத்தினர்.
இந்த அனைத்துக் கருத்துகளையும் கேட்டறிந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு, இவ்வாறான ஒரு கூட்டணியை உருவாக்குதல் தொடர்பில் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், சமூகத்தில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு பொதுவாக மக்கள் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.



