தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டில் அவர் உயிர் விடுத்த “தேசமாக ஒருமைப்பட்டு மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும்” என்ற அழைப்பை மீள் நினைவுபடுத்த இலக்கு விரும்புகிறது. அதே வேளை போராட்டம் என்பது ஆயுதப்போராட்டத்தை மட்டும் குறிக்கும் சொல்லல்ல. தீர்வை தர வல்ல சனநாயகப் போராட்டங்களையும் உள்ளடக்கியது என்ற உண்மையை தெளிவுபடுத்திக் கொண்டு மூலோபாய தன்னாட்சி மக்கள் இறைமையப் பாதுகாப்பதற்கான தேவையாக உள்ளதென்பதை திலீபன் உலகிற்கு வெளிப்படுத்தி 39 ஆண்டுகளின் பின்னர் இன்று ஐக்கிய இராச்சியத்தில் தியாக தீபம் திலீபனின் வழியில் மூலோபாய தன்னாட்சிக் கோரிக்கை வலுப்பெற்றுள்ள விதத்தினை எடுத்து நோக்க இலக்கு முனைகிறது.
பாராளுமன்ற ஆட்சி முறையின் தாய் எனப்படும் இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்ரர் பாராளுமன்றத்தின் கீழ் தாங்கள் தொடர்ந்தும் இருப்பதற்கான காலம் நிறைவுக்கு வருகிறதென ஸ்கொட்லாந்துப் பாராளமன்றத்தின் முதல் அமைச்சர் ஜோன் சுவினி (John Swinney), வடஅயர்லாந்துப் பாராளுமன்றத்தின் முதலமைச்சர் மிசல் ஓ நீல் (Michelle O’Neil ), வேல்ஸ் பாராளமன்றத்தின் முதல் அமைச்சர் (Rhun ap lorwerth) ஆகியோர் கூட்டாக கடந்த திங்கட்கிழமை 14.09.2026 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் உலகிற்கு பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இது தந்தை செல்வநாயகம் 1975 இல் ஈழத்தமிழர்களின் மேலான பிரித்தானிய காலனித்துவ கால வெஸ்ட் மினிஸ்ரர் பாராளுமன்றம் உருவாக்கிய சிங்கள பௌத்த பேரினவாதப் பெரும்பான்மை ஒற்றையாட்சி நிறைவுக்கு வருவதாக சிறிலங்காவின் தேசிய சபையில் ஈழத்தமிழர்களின் அக்கால அரசியல் தலைமையாளர் தந்தை செல்வநாயகம் உலகிற்கு அறிவித்த வரலாற்று நிகழ்வை ஈழத்தமிழர்களுக்கு நினைவுறுத்துகிறது.
ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வடஅயர்லாந்து மாநிலங்களுக்கு வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் தனது இறைமையின் கீழ் ஒற்றையாட்சியில் மாநிலங்களுக்கான பாராளுமன்றங்களை அளிக்கும் அதிகாரப்பகிர்வினைச் செய்ததின் பின்னர் முதற்தடவையாக மூன்று மாநிலங்களும் தங்கள் தங்களுக்கான தன்னாட்சி உரிமையினை தங்கள் முதலமைச்சர்கள் வழி கூட்டாக பிரகடனப்படுத்தியுள்ளன. இது ஐக்கிய இராச்சிய அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலே மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்வது அவர்களின் பிரிக்கப்பட இயலாத உரிமை என்பதினை மீள் உறுதி செய்துள்ளது.
இதனை இன்றைய அரசியல்வாதிகள் அரசியல் செயற்பாட்டாளர்கள் கவனத்தில் எடுத்து தாங்களே தங்களுடைய மக்களுடைய இறைமையைத் தன்னாட்சியை தங்களின் மக்கள் பிரயோகிப்பற்குத் தடையாக இனஅழிப்பு அரசியலை முன்னெடுக்கும் சிறிலங்காவிடம் உரிமை கோரும் நிலையை மாற்றுவதற்கான உலக உதாரணமாக, கொள்ள வேண்டும் என்பது இலக்கின் எண்ணம். இத்தகைய கூட்டான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் செய்வதற்கு முன்வர வேண்டியது மாறிவரும் உலக அரசியல் ஏற்படுத்தும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
இவ்விடத்தில் என்ன காரணங்களை முன்வைத்து மூன்று முதலமைச்சர்களும் தங்கள் மக்களின் தன்னாட்சி உரிமைப் பிரகடனத்தை வெளியிடுவதாகக் கூறினார்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. “இந்த தீவுகளில் வாழும் மக்களும் உலகெங்கும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களும் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்தின் காலம் நிறைவுக்கு வருவதற்கான எந்த தெளிவன அடையாளங்களையும் காணவில்லை. வெஸ்ட் மினிஸ்ரர் பாராளுமன்றத்துக்கு எங்கள் மக்களின் சனநாயகத்தை தடுப்பதற்கோ அல்லது எங்கள் மக்கள் தங்களுடைய அரசியல் சொந்த எதிர்காலத்தைத் தாங்களே முடிவுசெய்வதை புறக்கணிப்பதற்கோ எந்த உரிமையுமில்லை.
வருவதற்கான வேறு வேறான அரசியலமைப்பு நிலைகளைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு தேசஇனமும் தங்களுடைய எதிர்காலத்தைத் தங்களுடைய சொந்த வழியில் தங்களுக்குரிய காலத்தில் முடிவு செய்வதற்குரியவர்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.” என்பது மூன்று மாநில முதலமைச்சர்களினதும் பிரகடனமாகவுள்ளது.
இன்று இத்தீவுகளில் மட்டுமல்ல, இலங்கைத்தீவிலும், இதே காரணங்களை முன்வைத்தே பிரித்தானிய காலனித்துவ கால வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட பாராளுமன்ற ஆட்சி முறைமைக்கு எதிராக, காலனித்துவத்தால் தீர்க்கப்டாத தங்களின் தன்னாட்சி உரிமைக்காக ஈழத்தமிழர்களும் தாயகத்திலும் உலகெங்கிலும் சனநாயக ரீதியாக போராடி வருகின்றனர் என்ற உண்மையை ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்த கூட்டுப் பிரகடனம் ஒன்றின் மூலம் தெளிவாக வைக்க வேண்டும் என்பது உலக அரசியல் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தரும் இவ்வார அழைப்பாகவுள்ளது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
அதே வேளை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பெருநிலப்பகுதியில் உள்ள பிடிங்டன் (Piddingtonn) கிராம மக்கள் தங்களுக்கு அண்மையாக உள்ள பீஸ்டர் பழைய இராணுவ முகாம் கட்டிடத்தை குடிவரவாக வந்த 1250 பேருக்கான தங்கிடமாக ஹோம் ஒவ்விஸ் மாற்ற முனைவதை முன்னிட்டு அதனைத் தாங்கள் அனுமதிக்க மறுக்கின்ற காரணத்தால் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விலகுவதற்கான குடியொப்பம் ஒன்றைத் தாங்களே கடந்த செவ்வாய் 15ம் திகதியன்று நடத்தியுள்ளனர். இதுவே சமகால அரசியல் உலகில் முதன்முறையாக மக்கள் தாங்களே ஒன்று சேர்ந்து குடியொப்பம் நடாத்திய முதல் வரலாறாக பதிவாகியுள்ளது. 312 வழங்கப்பட்ட வாக்குகளில் 285 ஆதரவாகவும் 26 எதிராகவும் ஒரு வாக்கு வீணாகியதாகவும் குடியொப்ப முடிவு வெளியாகியுள்ளது. இவ்வாறு ஒரு கிராமமோ நகரமோ பெருநகரோ பிரிந்து போவதற்கு குடியொப்பம் நடத்துவது சட்டவலுவற்றதாக இருந்தாலும் மக்கள் தங்கள் கருத்தின் உறுதித்தன்மையை வெளிப்படுத்த குடியொப்பத்தையும் சனநாயகப் போராட்டக்கருவியாகக் கையாண்டுளள்னர். குடியொப்ப முடிவு குறித்து பிரித்தானியப் பிரதமர் அன்ட்டி பேர்ணம் தன்னால் மக்களின் உணர்ச்சியினைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளதெனவும் குடிவரவாகுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தனது அரசாங்கம் தொடர்ந்து தகுந்த செயற்பாடுகளைச் செய்யுமெனவும் கூறியுள்ளார்.
இந்நேரத்தில் ஈழத்தமிழர்கள் செம்மணி ஈழத்தமிழினப் புதைகுழிகள் குறித்த அனைத்துலக விசாரணை நடைபெறாவிட்டால் தாங்கள் சிறிலங்காவில் இருந்து பிரிந்து செல்லப்பபோவதாக தாயகத்தில் தாங்கள் ஒன்று கூடி இத்தகைய குடியொப்பம் ஒன்றை நடாத்தினால் என்னவென்கின்ற கேள்வியை சில இளையவர்கள் எழுப்பினர். இதனைக் குறித்து ஈழத்தமிழர்களின் சட்ட வல்லுநர்களிடம் கேட்பதே நல்லதென்றே பதிலளிக்க முடிந்தது. ஆயினும் தன்னாட்சி உரிமை எந்நேரத்திலும் எக்காரணம் கொண்டும் மக்களிடம் இருந்து பிரிக்கப்பட முடியாத உரிமை மட்டுமல்ல மக்களால் செயற்படுத்தப்படக்கூடிய உரிமை என்பதனை பிடிங்டன் மக்கள் குடியொப்பம் உலகிற்கு நிறுவியுள்ளது.
கடந்த வாரத்தில் காசா நீள்கரையில் இஸ்ரேல் அரசாங்கத்தின் 24 புலனாய்வுத்துறையினர் மூன்று ஆண்டுகளாக எவ்வாறு பலஸ்தீனிய மக்களில் தாங்கள் குறிவைப்பவர்களை நன்கு திட்டமிட்ட முறையில் ஈவுஇரக்கமின்றி மனிதப்படுகொலைகள் இனஅழிப்புக்கள் உட்கட்டுமான அழிப்புக்கள் செய்தனர் என்பதனை “நாசா (NAZA) என்னும் புதிய ஆவணப்படமொன்று 83வது வெனிஸ் அனைத்துலகத் திரைப்படத் திருவிழாவில் வெளிப்படுத்தியது என்பது குறித்தும் அது உலகில் இஸ்ரேலின் இனஅழிப்பின் வன்மையை வெளிப்படுத்திய வரலாற்று சாட்சியான ஆவணப்படமாக விளங்கி 25 நிமிடங்கள் வரை அதனைப் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதைக் கரவொலி எழுப்பினர் என்பதையும் குறித்துப் பேசியிருந்தோம். அன்பர் ஒருவர் அது குறித்த விபரங்களைக் கேட்டிருந்தார். இந்த ஆவணப்படம் த கார்டியன் (The Guardian)இன் அனுசரணையுடன் யேம்ஸ் வில்சன் (James Wilson) தயாரிப்பாளராகவும் ஜொனத்தன் கிளசர் (Jonathan Glazer) நிர்வாகத் தயாரிப்பாளராகவம் (executive producer) தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்தமை குறித்த பின்வரும் விளக்கத்தையும் கொடுத்துள்ளார்கள். “இந்த ஆவணப்படத்தை ஒரு சாதாரண காரணத்துக்காகவே எடுத்தோம். காசாவை நிர்மூலமாக்க வேண்டுமென்று கடும்கண்காணிப்பை மேற்கொண்டு எந்த அலுவலர்கள் படையினர் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றும் அறியாத மக்கள் எத்தனை பேர் கொல்லப்பட வேண்டும், என்று கணக்கிட்டு தாக்குதல்களை நடத்துவித்தார்களோ, யார் குடும்பங்களையே முற்றாக அழிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்பக் குண்டுவீச்சுகளுக்கு பச்சைக் கொடி காட்டினார்களோ, அவர்களிடமிருந்து பெறப்படும் எந்த ஆவணமும், குற்றங்களை மறுப்பதற்கானவைகளாகவே அமையும். இந்த மறுப்பு இத்தகைய குற்றங்கள் இன்று வரை தொடர்வதற்கான செயற்பாடுகளின் பகுதியாகவும் அமையும். இதனை தவிர்த்து உண்மைகளை உள்ளதை உள்ளபடி கொண்டு வரவே இவ் ஆவணப்படத்தை எடுத்தோம்.
இந்த படம் ஒரு முறைமை (System). இது வழங்கப்பட்ட கட்டளைகள், கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள், செயற்பாடுகளின் போக்குகள், என்பனவற்றிலிருந்து விலகலின்றி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களிலில் இருந்து நாம் பெற்ற இறுதி முடிவு தெளிவானது. ‘ காசாவில் பலஸ்தீன மக்கள் மீதான திரள்நிலைக் கொலைகள், “சோகத்தை வெளிப்படுத்துகிற ஒன்றல்ல. ஹாமாசுக்கு எதிரான சண்டையுமல்ல. பொதுவாக இது இஸ்ரேல் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், முற்கூட்டியே திட்டமிடப்பட்ட, கணிக்கப்பட்ட, வேண்டுமென்ற செயற்பாடு. இதனாலேயே ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவும், உலகின் முன்னணி மனித உரிமைகளுக்கான முன்னணிக் குழுக்களும், பலஸ்தீனிய இஸ்ரேலிய அனைத்துலக நிபுணர்களும் இதனை இனஅழிப்பு எனவே விபரிக்கின்றனர்.
இந்த வார்த்தைகள் ஈழத்தமிழர்கள் மேலான சிறிலங்காவின் இனஅழிப்புக்கும் பொருந்தும் என்பதனை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் உலகிற்குத் தெளிவாக்க வேண்டுமென்பது இலக்கின் இவ்வார அழைப்பாகவுள்ளது.மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் யோசப் விஜய் அவர்கள் கடந்த கால வரலாறுகளையும் மீள்வாசிப்புச் செய்து உண்மையை நீதியை வெளிப்படுத்த முயல்கின்ற நேரத்தில் தியாகதீபம் திலீபனின் உண்ணாவிரத இடத்துக்கு அக்கால இந்தியத் தூதுவராக விளங்கிய திரு டிக்சிட் அவர்கள் வேண்டுமென்றே செல்லாதுவிட்டதின் விளைவே இந்திய விடுதலைப்புலிகள் முரண்பாடுகள் பகைமைகள் நீக்கம் பெற இயலாமல் போனது என்று தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் குற்றச்சாட்டு குறித்த விசாரணையொன்றை இன்றைய மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்கிற அழுத்தத்தைக் கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல ஈழத்தமிழர் தமிழக மக்களின் இனத்துவ ஒருமைப்பாடடையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டுமெனவும் இலக்கு தியாக தீபம் திலீபனின் 39 வது நினைவேந்தல் ஆண்டில் வேண்டுகிறது.
ஆசிரியர்




