பெருந்தோட்டத் துறையில் புதிய திட்டம்: ஒப்பந்தங்களை பலப்படுத்த விளையும் அரசு! -மருதன் ராம்

இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் முதுகெலும் பாகவும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதன்மைத் துறையாகவும் பெருந்தோட்டத் துறை திகழ்கிறது.
இந்நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பெருந்தோட்டத் துறையின் உட்கட்டமைப்பு, மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாடு, வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான காணி வழங்கல், அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாபகரமான செயல்பாடு மற்றும் நவீன ஆராய்ச்சி மேம்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, முக்கிய பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக வெளிநாட்டுக்கு தொழிலுக்காக சென்றுள்ள இலங்கையர்களின் எதிர்காலத்துக்காக முதலீட்டு நோக்கத்தில் காணிகளை வழங்குவது குறித்தும் பெருந்தோட்ட நிறுவனங்களை ஒன்றிணைப்பதுடன் அவ்வாறான நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப் பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதன்படி, வெளிநாடுகளில் தங்களது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு தாய்நாடு திரும்பும் இலங்கைத் தொழிலாளர்களின் எதிர்கால முன்னேற்றத்தையும், அவர்களின் சேமிப்பை நாட்டில் பயனுள்ள வகையில் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
நாட்டில் தற்போது பயன்படுத்தப்படாமல் தரிசாக வும் பயனற்ற முறையிலும் கிடக்கும் பெருந்தோட்டக் காணிகளை அடையாளம் கண்டு, அவசியமான செயற் திட்டச் சேவைகளுடன் கூடிய நிலங்களாக ஒருங் கிணை த்து, நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு வழங்கு வதற் கான வேலைத்திட்டமொன்றை விரைந்து தயாரிக் குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத் தியுள்ளார்.
இது புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, நாட்டின் பயன் படுத்தப்படாத காணிகளை உற்பத்தித் திறனுள்ள நிலங்களாக மாற்றவும் உதவுமென தெரிவிக்கப்பட்டுள் ளது. அதேநேரம், மலையக மக்களின் நீண்டகால தேவைகளான வீட்டுவசதி மற்றும் அடிப்படை உட்கட்ட மைப்பு மேம்பாடுகளுக்கு இக்கலந்துரையாடலில் மிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
மலையக பெருந் தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக நடை முறைப்படுத்தப்பட்டு வரும் 10,000 வீடுகளைக் கட்டும் திட்டத்தை எவ்வித தாமதமுமின்றி உரிய காலத்திற்குள் விரைவாக நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “500 தேயிலை கிராமங்கள்” திட்டத்தின் பணிகளை, கிராமிய மட்டத்தில் செயற்படும் “சமூக சக்தி” போன்ற ஏனைய அபிவிருத்தி திட்டங்களுடன் இணைத்து ஒருங்கிணைந்த முறையில் விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த கலந்துரையாடலின் போது அரச பெருந் தோட்ட நிறுவனங்கள் வியத்தகு அடிப்படையில் இலாபத்தில் வளர்ச்சியை காண்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேயிலை, தென்னை, இறப்பர், முந்திரி மற்றும் பனை போன்ற பயிர்ச் செய்கைகளிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் இலாபமும் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, 06 அரச பெருந்தோட்ட நிறுவனங்களும் விரைவாகத் தமது இலாபத்தை அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்டங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. குறிப்பாக தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பெருந்தோட்டத்துறையை வலுப்படுத்துவதற்காக நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் அரசுக்கு உரிய வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.
முந்தைய அரசாங்கங்களால் நிறுவனங்களுக்குக் காணிகளை வழங்கும் போது கைச் சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் காணிகள் தொடர்பாக பலமான ஒப் பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது குறித்த நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காக நிதியமைச்சின் மூலம் குழுவொன்றை நியமிக்கும்படியும் அறிவுறுத்தினார்.
இதேவேளை, இலங்கையின் தேயிலை உற்பத்தி யில் பெரும் பங்கு வகிக்கும் சிறு தேயிலைத் தோட்டங் கள் சுமார் 60,000 ஹெக்டெயார் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளன. இவற்றில் மறுபயிரீடு செய்வதற்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 450.06 மில்லியன் ரூபாவில், இதுவரை 155.07 மில்லியன் ரூபா திறம்படச் செலவிடப்பட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்ற விடயமும் வெளிப்படுத்தப்பட்டது அத்துடன் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் பயிர் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இறப்பர் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும் மீள் பயிரிடலை விரிவுபடுத்தவும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2026 வரவு செலவுத் திட்டத்தில் 137 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிலவும் களப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து உற்பத்தி யைப் பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
‘டித்வா’ அனர்த்த நிவாரணத் திட்டம்
அதேநேரம் இந்த கலந்துரையாடலின் போது டித்வா புயலின் தாக்கம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ‘டித்வா’ இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்கான நிவாரணத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள் ளது. இதேவேளை, தேசிய பெருந் தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் உயர் பாடநெறிகளையும் பட்டயப் பயிற்சிகளையும் நாட்டின் பல்கலைக்கழகங்கள் ஊடாக வழங்கி, துறை சார்ந்த வல்லுநர்களை உரு வாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதி கள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டம், மலையக சமூகத்தின் கட்டமைப்பு ரீதியான மாற்றத்திற்கும் இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் மறுமலர்ச்சிக்கும் ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
பயன்படுத்தப்படாத நிலங்களை உகந்த முறை யில் பயன்படுத்துதல், மலையக மக்களின் அடிப்படை உரிமையை உறுதி செய்தல், அரச நிறுவனங்களை இலாபப்பாதைக்கு திருப்புதல் மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிர்ச்செய்கை விரிவாக்கம் ஆகிய திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் போது, அது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மலையக மக்களின் வாழ்வியலையும் புதியதோர் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.