முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதியும் கடற்படை அட்மிரலுமான வசந்த கரன்னகொட ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையானது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளின்படி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட இலங்கை கடற்படையின் தளபதியாகப் பணியாற்றிய காலத்தில், 2006 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007 ஜூன் 8ஆம் திகதி வரை பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் நடைபெற்ற அரச கடற்படை இளம் அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் யோஷித ராஜபக்ச பங்கேற்பதற்கு வசதி செய்து கொடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அதே ஏற்பாட்டின் மூலம் முறையற்ற ஆதாயத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை முறைப்படி வழங்குவதற்காக, நீதிமன்றம் உரிய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அழைப்பாணை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



