இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவின் தேசிய கட்டுமான வல்லுநர்கள் சங்கத்தின் உயர்மட்ட வணிகத் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நீண்டகால சுமுகமான உறவுகளை நினைவு கூர்ந்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, முதலீடு மற்றும் ஆற்றல்மிகு தொழிலாளர்களின் இடப்பெயர்வு ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் உறுதியான பொருளாதார நன்மைகளை உருவாக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கையின் சுற்றுலாத் துறையில், குறிப்பாக ஹோட்டல் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்புத் திட்டங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க விள விளக்கமளித்தார்.
ரஷ்யாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த 24 சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய இத்தூதுக்குழுவிற்கு அந்தோணி மொரோஸ் தலைமை தாங்கினார். இவர்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், ரஷ்யாவில் தகுதிவாய்ந்த இலங்கை கட்டுமான வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுடனும் தூதுக்குழுவினர் விரிவாக ஆராய்ந்தனர்.



