நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் விரிவான மற்றும் நீடித்த சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ள அரசாங்கத்தின் தீர்மானம் வரவேற்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த வன்முறைச் சம்பவத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐ.நா. ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஐ.நா., காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
அறிக்கையில், “உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள் அரசின் பாதுகாப்பிலும் பொறுப்பிலும் இருந்தவர்கள். சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளும் பாதுகாப்பான சூழலில் வாழவும் பணியாற்றவும் உரிமையுடையவர்கள். அந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் அடிப்படைக் கடமையாகும்,” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் நீண்டகால சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை மீண்டும் நினைவூட்டுவதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர சுயாதீன விசாரணைக் குழு மேற்கொள்ளும் ஆய்வு, சிறைச்சாலை அமைப்பில் நிலையான முன்னேற்றங்களையும் மனித உரிமைப் பாதுகாப்பையும் வலுப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையையும் ஐ.நா. வெளியிட்டுள்ளது.



