பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத உற்பத்தியைப் பெருக்கும் நோக்கினைக் கொண்டுள்ளது. ஆயினும் வான்வழி ஆயுத உற்பத்திகள் அனைத்துலகத் தன்மை உள்ளதாக உள்ளதால் இந்த முதலீட்டின் வழியாக வெளிநாடுகளிலேயே வேலை வாய்ப்புக்கள் உருவாகுமெனவும் இதனால் உட்கட்டுமானங்களுக்கான நிதி பாதுகாப்புத்துறைக்குச் செலவிடப்பட உள்ளதால் பிரித்தானியாவில் 2029-30 காலப்பகுதியில் 10000 வேலையிழப்புக்கள் ஏற்படுமென பிரித்தானியாவின் த கார்டியன் ஆங்கில நாளிதழின் பாதுகாப்புக்கொள்கை குறித்த கொள்கை ஆசிரியர் கிரான் (Kiran Stacey-Policy editor) தனது பாதுகாப்புக்கான “உட்கட்டுமான வெட்டுக்கள் 10000 வேலையிழப்புக்களை ஏற்படுத்துமென ஆய்வுகள் காட்டுகின்றன” என்ற தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் புதிய தலைமுறைக்கான நவீன கப்பல்களை கட்டுவதற்கும் இந்தோ பசுபிக் கடற் பிரதேசங்களில் ஏவுகணைக் குவிமாடங்களை அமைப்பதற்குமாக 1 ட்ரில்லியன் டொலர்களை படைத்துறைக்கு ஒதுக்கியுள்ளது. சீனாவும் தனது படைத்துறைக்கு 282 பில்லியன் டொலர்களை முன்னையதை விட 6.9 வீத அதிகரிப்புடன் ஒதுக்கியுள்ளது. ரஸ்யாவும் 838.7 பில்லியன் டொலர்களை தனது படைத்துறையில் செலவிடவுள்ளது.
பிரான்ஸ் 500 பில்லியன் டொலர்களை தனது படைத்துறைக்கு ஒதுக்கியுள்ளது. யேர்மன் 127 பில்லியன் டொலர்களை தனது படைத்துறைக்கு ஒதுக்கியுள்ளது. இந்தியாவும் தனது 2026-27 86 பில்லியன் டொலர்களை முன்னையதை விட 18 வீத அதிகரிப்புடன் படைத்துறைக்கு ஒதுக்கியுள்ளது. சிறிலங்காவும் தனது படைத்துறைக்கு 1.5 பில்லியன் டொலர்களை ஓதுக்கியுள்ளது. நாடுகளின் படைத்துறைக்கான இந்த நிதி ஒதுக்கீடு இன்றைய உலகின் அரசியல் ஒழுங்குமுறை வான்வழி ஆயுதப்பலமே என்பதாக நடைமுறையில் மாறியுள்ளது. என்பதை இலக்கு முதலில் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
நீங்கள் இந்த ஆசிரிய தலையங்கத்தை வாசித்துக் கொண்டிருக்கிற இந்த நிமிடத்திலேயே 1 மில்லியன் டொலர் உலக இராணுவத் தேவைகளுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை “Peaceful World” இணையதளத்துக்குப் போனால் நீங்கள் காணலாம். இந்த இணையத்தளம் ஒவ்வொரு நிமிடமும் உலகின் இராணுவத் தேவைகளுக்கு நிதி ஒதுக்கப்பட ஒதுக்கப்பட உடனுக்குஉடன் அதனை தரவேற்றிக் கொண்டிருக்கும் இணையத்தளம். இந்த வருடத்தில் இந்த ஆசிரிய தலையங்கம் எழுதப்படும் நேரம் வரை 1226 ட்ரில்லியன் டொலர்களை உலக இராணுவத்தேவைகள் பெற்றுள்ளன என்பதனை இந்த இணையத்தளம் அறியத்தருகிறது.
இவ்வாறு உலகெங்கும் படைத்துறைக்கான நிதி ஒதுக்கீடு என்றுமில்லாத அளவுக்கு அதிகமாக ஒதுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய நிலையில் எல்லா நாடுகளிலும் ஆட்சியாளர்கள் தங்களின் அரசைப் பாதுகாப்பதற்கான துறையாகவே படைத்துறையைக் கருதிப் பயன்படுத்த முயல்கின்றார்களே தவிர மனிதரின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கு வளர்ச்சிகளுக்குப் படைத்துறை பாதுகாப்பு என்ற நிலை மாறுபட்டுள்ளது என்பதையும் இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது. இதனாலேயே இன்றைய உலகின் இந்த புதிய அரசியல் ஒழுங்குமுறை எந்த நாட்டில் இருந்தும் தமது பொருளாதாரத்திற்குத் தேவையான மூலவளங்களை மனிதவலுவை மூலதனத்தைப் பெறுவதற்கு எந்த வல்லாண்மைகளும் மேலாண்மைகளும் தமது வான்வழி ஆயதப்பலத்தைப் பயன்படுத்தல் என்கின்ற புதிய போர்முறைமையொன்றையும் உலகில் தோற்றுவித்துள்ளதை அமெரிக்க – ஈரான் போர்க்களம் உலகிற்குத் தெளிவாக்கியுள்ளது என்பதை இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இத்தகைய அரசியல் எதார்த்தத்தில் உலகின் மூத்த குடிகளாகவும் சிறுதேசஇனமாகவும் உள்ள ஈழத்தமிழர்கள் போன்ற உலகின் தேச இனங்கள் எவ்வாறு தமது வரலாற்றுத் தாயகங்களில் தமது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரையுள்ள தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையை பேணலாம் என்பதே இன்றுள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
இத்தகைய தேசஇனங்கள் முதலில் தமது மண்ணின் வளங்களையும் மக்களின் மனிதவலுத்தன்மைகளையும் தமது சிறுதேசஇனத்தின் உலகளாவிய சமுக மூலதனப்பலத்தையும் தெளிவாக தாம் தெளிவாக அறிய வேண்டு:ம். இதனை அறிவார்ந்த அணுகுமுறையில் பட்டியலிட்ட பட்டியலுடன் உலகநாடுகளை அணுகி தங்களுக்கான பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கும் வளர்ச்சிகளுக்குமான உரையாடல்களை அந்த அந்த நாட்டின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக கட்டமைப்புக்களுடன் நடத்துவதன் மூலமே தங்களது இறைமையைப் பேணலாமென்பதே இன்றுள்ள நடைமுறைச் சாத்தியமான நிலை. இதனை அனைத்துலக ஈழத்தமிழர்கள் கவனத்தில் கொண்டு ஈழத்தமிழ் அரசியல்வாதிகளை விடுத்து அனைத்துலக சட்டங்களுக்கும் தமது நாடுகளின் சட்டங்களுக்கும் அமைய உரையாடல்களை தொடங்க வேண்டிய நேரமிது என்பதை இலக்கு அழுத்திக் கூற விரும்புகிறது.
ஆயினும் இதற்கு ஈழத்தமிழர்கள் போன்ற உலகின் மூத்த குடிகள் பிரித்தானிய காலனித்துவத்தால் தங்கள் தன்னாட்சி உரிமையப் பயன்படுத்தி தமக்கான அரசியல் எதிர்காலத்தை உருவாக்க இயலாத நிலையில் பிரித்தானியாவால் தங்களின் விருப்புக்கு ஏற்பச் சுதந்திரம் வழங்கிய நிலையில் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக அனைத்துலக நாடுகளாலும் அனைத்துலக மன்றத்தாலும் அவர்களது வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை அமைக்க வேண்டிய நடைமுறை அரசியல் எதார்த்தம் தொடர்கிறது. இதனால் ஈழத்தமிழர்கள் அரசற்ற தேசஇனமாகவே தங்கள் சமகாலத்தேவைகளையும் இறைமையும் பேண வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது. இதனை இளைய ஈழத்தமிழர்களிடையான ஒருமைப்பாட்டாலும் அர்ப்பணிப்புடனான தேசிய தாயகப் பற்றுக்களாலும் இளைய ஈழத்தமிழர்களால் இலகுவாக எதிர்கொள்ள முடியும் என்பது இலக்கின் ஆணித்தரமான நம்பிக்கை.
இது இலகுவான விடயமல்ல. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையால் நாடுகள் என்ற அங்கீகாரத்துள் உள்ள நாடுகளின் இறைமைக்குள் ஐக்கி நாடுகள் சபையோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது. இதனைப்பயன்படுத்தியே உலகின் சிறுதேச இனங்களை இளஅழிப்பு செய்வதைக்கூட நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் செயலென நியாயப்படுத்தி உலகின் வல்லாண்மைகளும், மேலாண்மைகளும் துணைபோகும் நிலையில் உலகில் இனஅழிப்பு தேச இறைமைக்கான தேசிய பாதுகாப்புச் செயல் என்ற அரசியல் கோட்பாடாகவே ஆட்சியாளர் களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஈழத்தமிழர்கள் முதல் பலஸ்தீனியர்கள் வரை சிறுதேச இனங்களின் இனஅழிப்புக்கு வல்லாண்மைகளும் மேலாண்மைகளுமே திட்டமிடல் முதல் ஆயுத வழங்கல் வரை செய்கின்றார்கள் என்பது உலக வரலாறாக உள்ளது.
இந்நிலையில் உலகில் ஈழத்தமிழர்கள் போன்ற அரசற்ற சிறுதேசஇனங்கள் (Nations without state) தாங்களே தங்களின் தேசநிர்மாணத்தை (Nation Building Process) முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதுவே ஈழத்தமிழரின் 22.05. 1972 முதல் இன்று வரையான 54 ஆண்டுகால வாழ்வியலாக உள்ளது. இத்தகையவர்களுக்கு இன்று நாடுகளுக்கு வான்வழி ஆயுதபலமாக உள்ளது போல இணையவெளிப் பலத்தை உள்ளது. எவ்வாறு வான்வெளி ஆயுதபலத்தைப் பெருக்குதலுக்கு நிபுணத்துவ திட்டமிடலும் அனைத்துலக நாடுகளின் கூட்டாண்மை பங்காண்மையும் முக்கியமோ அவ்வாறே ஈழத்தமிழர்கள் தேசங்கடந்துறை மக்களாக உலக இனமாகப் பரிணாமம் பெற்றுள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் இணையஷவெளிப்பலத்தை அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்களிடையான கூட்டாண்மை மூலமும் பங்காண்மைமூலமும் பெருக்கிக் கல்வித் திட்டங்களால் ஈழத்தமிழர்களின் அறியாமையையும் பொருளாதாரத்திட்டங்களால் ஈழத்தமிழர்களின் வறுமையையும் நீக்குவதற்கான செயலணிகளை ஈழத்தமிழர்கள் உருவாக்க வேண்டும்.
இதனை விடுத்து ஈழத்தமிழர்கள் தங்கள் முழுமையைப் பாகம் பாகமாகப் பிரிப்பதற்கான செயற்பாடுகளையே இணைய வெளி வழி செய்து வருவதே ஈழத்தமிழரின் அறியாமையையும் வறுமையையும் நீக்க இயலாதிருப்பதற்கான தலைமைக்காரணம் என்பது ஈழத்தமிழர்களுக்கு நன்கு தெரியும். இதனை எப்படி மாற்றுவது? ஈழத்தமிழர்களின் அறிவுச் சமுகமும் பொருளாதாரச் சமுகமும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணையவெளிக் கவுன்சில்களை உருவாக்குதன் மூலமே இதனை நடைமுறைப்படுத்த முடியும். அத்தகைய கவுன்சில்களின் வளர்ச்சி வழியாகவே ஈழத்தமிழர்களின் தேச நிர்மாணத்துக்கான உரையாடல்களும் அரசியலைக் கடந்த நிலையில் எல்லா நாடுகளின் மக்களுடனும் மேற்கொள்வதற்கான நிலை நடைமுறைச் சாத்தியமாகும். இளையவர்கள் இதனைக் கவனத்தில் எடுத்துப் பல்கலைக் கழக மட்டங்களில் தமது துறைசார் பேராசிரியர்களுடன் இணைந்து இதற்கான ஆரம்ப முயற்சிகளைச் செய்வார்களாயின் அதுவே பலமான கட்டமைப்புக்கள் உருவாக வழிபிறக்கும் என்பதையும் இத்தகைய கவுன்சில்கள் வழியாகவே உலக நாடுகளுடனான உரையாடல்கள் நடைமுறைச்சாத்தியமாகுமென்பதையும் நாம் கவனத்தில் கெண்டு அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஈழத்தமிழர் இணையக் கவுன்சில்கள் உருவாக உழைக்க வேண்டும்.
ஆசிரியர்
Ilakku Weekly ePaper 398 | இலக்கு-இதழ்-398 | சனி, 04 யூலை, 2026




