பிரித்தானியா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாட்டில் மரபணு வங்கியை நிறுவுங்கள்: BTF வலியுறுத்தல்

இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்பன தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப்பொறிமுறையொன்றை ஆரம்பிப்பதற்கும், பிரித்தானியா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடொன்றில் சர்வதேச மேற்பார்வையுடன்கூடிய மரபணு (டி.என்.ஏ) வங்கியொன்றை நிறுவுவதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 400 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து புலம்பெயர் தமிழர் அமைப்பான பிரித்தானிய தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய ரீதியில் இன்னமும் தீர்வுகாணப்படாத, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக உயர்வாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் 60,000 – 100,000 வரையான நபர்கள் காணாமல்போயிருப்பதாக தரவுகள் கூறுகின்றன. உள்நாட்டுப்போருடன் தொடர்புடைய விதத்தில் தற்போதுவரை தீர்க்கப்படாத பெரும்பாலான சம்பவங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.

செம்மணி, மண்டைதீவு, மன்னார், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட பல இடங்களில் கண்டறியப்பட்டிருக்கும் மனிதப்புதைகுழிகள், சுயாதீன தடயவியல் விசாரணைகள் மற்றும் நீதித்துறைப் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கான ஆதாரங்களை வழங்கியுள்ளன. அம்மனிதப்புதைகுழிகளில் மனித எலும்புக்கூடுகள், தனிப்பட்ட பொருட்கள் மற்றும் ஏனைய தடயவியல் சான்றுகள் கண்டறியப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கோ அல்லது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கோ நம்பகமானதும் சுயாதீனமானதுமான செயன்முறையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு, தமது அன்புக்குரியவர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் நிலை என்ன? என்ற உண்மையை அறிந்துகொள்வதற்கான அடிப்படை உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது.

வெளிப்படைத்தன்மை வாய்ந்த மரபணு அடையாளப்படுத்தல் செயன்முறையின்மை, சர்வதேச தடயவியல் பங்களிப்பை அனுமதிக்கத் தவறியமை, சுயாதீன விசாரணைகள் குறித்து தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டுவரும் எதிரிப்பு என்பன உள்நாட்டு மோதலின்போது இடம்பெற்ற மிகமோசமான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படும் அல்லது மறைக்கப்படும் அல்லது கவனத்திற்கொள்ளப்படாமல் விடப்படும் என்ற கரிசனைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்பன தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப்பொறிமுறை, பிரித்தானியா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடொன்றில் சர்வதேச மேற்பார்வையுடன்கூடிய மரபணு (டி.என்.ஏ) வங்கியொன்றை நிறுவுதல், இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடமிருந்து மரபணு மாதிரிகளை சேகரித்ததல், இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள சகல மனிதப்புதைகுழி அமைந்துள்ள இடங்களுக்கும் சர்வதேச தடயவியல் நிபுணர்களை அனுப்பிவைத்தல், மோதல் இடம்பெற்ற மற்றும் மோதலுக்குப் பிந்திய காலகட்டங்களில் மனிதப்புதைகுழிகளாக இனங்காணப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் சகல இடங்களிலும் செயற்கைக்கோள் படங்கள் மூலமும், புவிவியல் ரீதியிலும் பகுப்பாய்வு செய்தல், சாட்சியங்கள் மூலம் அடையாளங்காணப்பட்ட மண்டைதீவு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் அகழ்வாய்வினை மேற்கொள்ளல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், அதன் உறுப்புநாடுகளும் இலங்கையிடம் கோரவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.