என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – பிள்ளையான் தெரிவிப்பு

“என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது ஊடகங்கவியலாளர்களைப் பார்த்து பிள்ளையான் கூறினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற ‘பிள்ளையான்’ மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை அடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விடுக்கப்பட்ட பணிப்புரையின் அடிப்படையில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

ஐந்து ஆட்கொலை தொடர்பில் சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் கல்லடியில் உள்ள காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பிலேயே இன்றைய நீதிமன்ற விசாரணை நடைபெற்றன.

இது தொடர்பான வழக்கு விசாரணை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில்,  வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று கல்லடி காணி பிணக்கு தொடர்பான வழக்கினை ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.