பெண்கள் ஒதுக்கீட்டில் எமக்கு பாடம் தேவையில்லை: மனோ கணேசன்

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 2018 ஆம் ஆண்டு எமது நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்கியது. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதில் உறுதியாக இருந்தார். நாங்களும் ஒத்துழைப்பு வழங்கினோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு கடந்த வாரம் பாராளுமன்ற கட்டத் தொகுதியில் கூடிய போது பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உட்பட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் முன்னிலையாகியிருந்தனர்.

மாகாணசபைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் ஒதுக்கீடு குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த குழுவின் உறுப்பினரான மனோ கணேசன்,  மாகாணசபைத் தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என்பதையே குறிப்பிடுகிறோம்.தேர்தலை பிற்போடும் உத்தியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது.

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று எவரும் பாடம் புகட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் இலங்கை அரசியல் வரலாற்றில் எமது நல்லாட்சி அரசாங்கம் தான் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெண்களுக்கும்,இளைஞர்களுக்கும் 25 சதவீத ஒதுக்கீடு உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வழங்கப்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்க கூடாது என்று பலர் குறிப்பிட்டனர்.ஆனால் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு அடிபணியாமல் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.நாங்களும் அதற்கு முழுமையான இணக்கம் தெரிவித்தோம். ஆகவே புதிய விடயங்களை எமக்கு குறிப்பிடுவதாக  பிரசாரம் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டு;க் கொள்கிறோம் என்றார்.