இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது, இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை மதித்து நடப்பதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்பட்டது.

ஆனால், தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் இந்த சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கைதிகள் நடத்தப்படும் விதம் மற்றும் சித்திரவதைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கையின் மீது திரும்பியுள்ளதைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இது நாட்டின் சர்வதேச அந்தஸ்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துவிட்டு வந்த சுகீஸ்வர பண்டார மற்றும் அவரது வாகனத்தில் பயணித்த ஊடக ஒருங்கிணைப்பாளர் பினோய் (Binoy)ஹெட்டியாரச்சி ஆகியோர் கைது செய்யப்பட்டமையை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

இது ஒரு “பொலிஸ் ஆட்சியின்” பண்பு என விமர்சித்த அவர், எதிர்க்கட்சியினரின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.