சுரேஷ் சலேயின் உளவுத் தகவல்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு விற்கப்படலாம் என எச்சரிக்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் உள்ள ரகசியமான தேசிய பாதுகாப்புத் தகவல்கள், ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரியால் பணத்திற்காகப் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு விற்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரித்துள்ளார்.

இத்தகைய ஆபத்தான சூழலிலும் நாட்டின் தேசியப் பாதுகாப்பைக் காட்டிக்கொடுக்காமல் சுரேஷ் சலே பாதுகாத்து வருவது பெருமையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் முறையான சட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘மிலேனியம் சிட்டி’ காட்டிக்கொடுப்புச் சம்பவத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள சாகர காரியவசம், அன்று இரகசியத் தகவல்கள் திட்டமிட்டு வெளியானதன் காரணமாக, வடக்கிலிருந்து இராணுவத்திற்குத் துல்லியமான உளவுத் தகவல்களை வழங்கிய தகவல் வழங்குநர்களும் படை அதிகாரிகளும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.

எனவே, சுரேஷ் சலேயின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றில் உள்ள முக்கியத் தகவல்களை ஏதேனும் ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரி பகிரங்கப்படுத்தினால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரழிவாக முடிந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே, சுரேஷ் சலேயின் மின்னணு சாதனங்களைச் சோதனையிட வேண்டுமாயின் அதற்குரிய முறையான நீதிமன்ற உத்தரவைப் பெற்று, மிகவும் பொறுப்பு வாய்ந்த ஓர் உயர் அதிகாரியிடம் மட்டுமே அவற்றை ஒப்படைக்க வேண்டும் எனத் தங்களது கட்சி வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை எவராலும் அவ்வளவு எளிதாகத் துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்பதால், அவ்வாறு சட்டரீதியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால் அனைத்துத் தகவல்களையும் விசாரணை அதிகாரிகளுக்கு வெளிப்படுத்தச் சுரேஷ் சலே தயாராக இருப்பார் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.