பாலியல் குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம், மசசூசெட்ஸில் (massachusetts) உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பௌத்த மதகுருவாகக் கடமையாற்றிய 32 வயதான இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குவான மஹாயாயே வினீத தேரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“பாலியல் தொழிலை வணிக ரீதியில் பெற்றுக்கொள்பவர்களை இலக்குவைத்து பொஸ்டன் (Boston) பொலிஸார் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின்போது அவர் கைதுசெய்யப்பட்டார். இவருடன் மேலும் 6 ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனனர்
மஹாயாயே வினீத தேரர் கடந்த 2024 டிசம்பர் மாதம் முதல் குறித்த பல்கலைக்கழகத்தில் பௌத்த மதகுருவாகக் கடமையாற்றி வந்ததுடன், மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டலையும் வழங்கி வந்தார்
இந்நிலையில் பொஸ்டனில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஃபீபா உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்பதாக ஆட்கடத்தல் மற்றும் வணிக ரீதியிலான பாலியல் தொழில் என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பொஸ்டன் காவல்துறையினரால் ‘ஒப்ரேஷன் ரெட் கார்ட்’ (Operation Red Card) எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இரகசிய நடவடிக்கை மூலமே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
பாலியல் தொழிலாளிகளாக நடித்த காவல்துறை அதிகாரிகளால் இணையத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு மஹாயாயே வினீத தேரர் பதிலளித்ததாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி பாலியல் ரீதியான பல்வேறு செயல்களில் ஈடுபடுமாறு அவர் கோரியதாகவும், அதற்காக 125 – 400 அமெரிக்க டொலர்கள் வரை செலுத்துவதாகக் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் பொஸ்டனில் உள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து குறித்த தேரர் உள்ளிட்ட எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் இன்னமும் நிரூபிக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மஹாயாயே வினீத தேரர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



